கடலூர்
காட்டுமன்னார்கோவில் அருகே ஒரு செல்போனுக்கு 3 பேரிடையே தகராறு; கல்லூரி மாணவி தற்கொலை
|காட்டுமன்னார்கோவில் அருகே ஒரு செல்போனுக்கு 3 பேரிடையே தகராறு ஏற்பட்டதால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காட்டுமன்னார்கோவில்,
கல்லூரி மாணவி
காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பழஞ்சநல்லூர் மனவெளி தெருவை சேர்ந்தவர் சங்கரன் மகள் வினிதா(வயது 17). மயிலாடுதுறையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த வினிதா மற்றும் அவரது தங்கை தேவிகா, தம்பி விஜயகுமார் ஆகியோரிடையே வீட்டில் இருந்த ஒரே ஒரு செல்போனை யார் பயன்படுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் சண்டை போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதைபார்த்த சங்கரன், 3 பேரையும் கண்டித்ததாக தெரிகிறது.
விஷம் குடித்தார்
இதனால் மனமுடைந்த வினிதா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், வினிதாவை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மாலை வினிதா உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.