வேலூர்
பள்ளி அருகே தேங்கிய கழிவுநீர் அகற்றம்
|தினத்தந்தி செய்தி எதிரொலியாக பள்ளி அருகே குட்டை போல் தேங்கிய கழிவுநீர் அகற்றப்பட்டது.
குடியாத்தம் ஒன்றியம் அக்ராவரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரே கழிவுநீர் குட்டைபோல் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்களும், பள்ளி நிர்வாகமும் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
இந்த கழிவுநீரால் 20-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு கடந்த சில நாட்களாக பள்ளிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து 'தினத்தந்தி'யில் படத்துடன் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனையடுத்து குடியாத்தம் ஒன்றியக்குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் உத்தரகுமாரி, ஒன்றியகுழு உறுப்பினர் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் முனிசாமி, வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் அசோக்குமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், ஒன்றிய பொறியாளர் புவியரசன், பணி மேற்பார்வையாளர் இளவரசி ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
ஆய்வை தொடர்ந்து அங்கு தேங்கியிருந்த கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். நிரந்தரமாக அப்பகுதியில் கழிவுநீர் தேங்காத வகையில் சுமார் 250 மீட்டர் தொலைவிற்கு கழிவுநீர் கால்வாய் செல்ல பைப்லைன் அமைப்பது, மூன்று இடங்களில் தரைதள நீர் உறிஞ்சி குழிகள் அமைப்பது என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு விரைவில் பணிகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.