ராமநாதபுரம்
பணிநீக்கம் செய்யப்பட்ட நர்சுகள் மனு
|கொரோனா காலத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட நர்சுகள் வேலை வேண்டி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வந்த கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட நர்சுகள் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் திரளாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- கொரோனா பெருந்தொற்று காலத்தில் தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் நர்சுகள், 300 டாக்டர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் டாக்டர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டனர். 3 ஆயிரம் நர்சுகள் நிரந்தர நர்சுகளாக பணிநியமனம் செய்யப்பட்டனர். மீதம் உள்ள 3 ஆயிரத்து 290 நர்சுகளை பணிநியமனம் செய்துகொள்வதாக உறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக எங்களை இரவோடு இரவாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பணிநீக்கம் செய்துவிட்டனர். இதனை தொடர்ந்து கோர்ட்டு எங்களை 6 மாதத்திற்குள் பணியில் அமர்த்த உத்தரவிட்டுள்ளது. இதனை ஏற்று தமிழக அரசு உடனடியாக எங்களை பணி நியமனம் செய்து அதற்கான உத்தரவினை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.