ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதிகளின் பெயர்களை மாற்றக்கோரிய வழக்கு முடித்துவைப்பு - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
|ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதிகளின் பெயர்களை மாற்றக்கோரிய வழக்கை மதுரை ஐகோர்ட்டு கிளை முடித்து வைத்தது.
மதுரை,
மதுரை ஐகோர்ட்டில் சிவகாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் ஆதிதிராவிடர் வகுப்பினர் வசிக்கும் பகுதிகள் காலனி, சேரி, குப்பம் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இப்பெயர்கள் அரசு ஆவணங்கள், ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளிலும் அச்சிடப்பட்டுள்ளன. இதனால் தீண்டாமை கொடுமை, சாதி வன்முறைகள் அதிகரிக்கும். பாரபட்சமான முறையில் அடையாளங்களை குறிப்பிடுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.
எனவே அரசு ஆவணங்களில் இருந்து காலனி, சேரி, குப்பம் ஆகிய பெயர்களை நீக்கவும், ஆதிதிராவிடர்கள் வசிப்பிடங்களுக்கு புதிய பெயர் சூட்டவோ அல்லது அப்பகுதியின் பிரதான பெயரில் அழைக்கும்படி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, இதே கோரிக்கை தொடர்பான மனு ஏற்கனவே தள்ளுபடியாகியுள்ளது என்றார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை எனக்கூறி மனுவை முடித்து வைத்தனர்.