< Back
மாநில செய்திகள்
சிவகார்த்திகேயனின் ஊதியத்தை கேட்டு தொடரப்பட்ட மனு தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

சிவகார்த்திகேயனின் ஊதியத்தை கேட்டு தொடரப்பட்ட மனு தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
22 Dec 2022 12:14 AM IST

‘பிரின்ஸ்’ படத்தில் நடிப்பதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் பெற்ற ஊதியத்தை கேட்டு தொடரப்பட்ட மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் டேக் என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ் தாக்கல் செய்த மனுவில், 'கே.ஜே.ஆர். ஸ்டூடியோ மற்றும் 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'ஹீரோ' என்ற படத்தை தயாரிக்க எங்களிடம் ரூ.5 கோடி கடன் பெற்றன. அதற்கான வட்டியோடு சேர்ந்து ரூ.6.92 கோடியை தர வேண்டும். அந்த தொகையை இதுவரை தரவில்லை. ஆனால் கே.ஜே.ஆர். நிறுவனம் சிவகார்த்திகேயனை வைத்து பல படங்களை தயாரித்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிகராக மட்டுமின்றி, கே.ஜே.ஆர். நிறுவனத்துடன் இணைந்து படத் தயாரிப்பாளராகவும் பங்காற்றியுள்ளார். எனவே, 'பிரின்ஸ்' படத்துக்காக அவர் பெற்றுக்கொண்ட ஊதியத்தை இந்த வழக்குக்காக கோர்ட்டில் செலுத்த உத்தரவிட வேண்டும்' என்று கோரியிருந்தார்.

ஊதியம் வேண்டும்

இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், 'கடந்த 2019-ம் ஆண்டு முதல் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அயலான், டான், டாக்டர் போன்ற படங்களின் தயாரிப்பாளராகவும் நடிகர் சிவகார்த்திகேயன் இருந்துள்ளார். எனவே கே.ஜே.ஆர். நிறுவனம் எங்களுக்குத் தரவேண்டிய தொகைக்காக 'பிரின்ஸ்' படத்தில் நடித்ததற்காக நடிகர் சிவகார்த்திகேயன் வாங்கிய ஊதியத்தை ஐகோர்ட்டில் செலுத்த உத்தரவிட வேண்டும்' என வாதிடப்பட்டது,

தொடர்பு இல்லை

சிவகார்த்திகேயன் தரப்பில், 'பிரின்ஸ்' படத்தில் நடித்ததற்காக சிவகார்த்திகேயன் ஊதியம் பெற்றுள்ளார். சிவகார்த்திகேயனுக்கும் தயாரிப்பு பணிக்கும் எந்த தொடர்பும் இல்லை. மனுதாரர் நிறுவனத்துக்கும், மற்றொரு தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே உள்ள பிரச்சினையில் சிவகார்த்திகேயனின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்குடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டான், டாக்டர் உள்ளிட்ட 5 படங்களை சிவகார்த்திகேயன் தயாரிக்கவில்லை' என்று வாதிடப்பட்டது.

தள்ளுபடி

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி சரவணன், 'பிரின்ஸ்' படத்துக்கு சிவகார்த்திகேயன் பெற்ற ஊதியத்தை கேட்டு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்