பதவி நீக்கம் செய்ய கோரிய கவர்னருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு
|பதவி நீக்கம் செய்ய கோரிய கவர்னருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சீபுரம் மாவட்டத் தலைவர் கண்ணதாசன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த கோ வாரண்டோ மனுவில், "தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இந்த பதவிக்குரிய ஊதியம் உள்ளிட்ட பண பலன்களை பெற்றும் வருகிறார். அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 158 (2)-ன் கீழ் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிக்க முடியாது. எனவே, அவர் எந்த சட்டத்தின் அடிப்படையில் கவர்னர் பதவியை தொடர்கிறார்? என்று விளக்கம் கேட்டு, அவரை கவர்னர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். இந்நிலையில், நேற்று இந்த வழக்கின் தீர்ப்பை அளித்த நீதிபதிகள், "சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புகளின்படி பதவியில் இருக்கும் குடியரசுத் தலைவரோ அல்லது கவர்னர்களோ நீதிமன்றங்களுக்கு பதிலளிக்க கட்டுப்பட்டவர்கள் அல்ல எனக்கூறியுள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல" என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.