மு.க.ஸ்டாலினுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி -ஐகோர்ட்டு உத்தரவு
|சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு சென்றது தொடர்பாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸ் ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தமிழ்நாட்டில் தாராளமாக கிடைப்பதாக தி.மு.க., குற்றம் சாட்டியது. இதை நிரூபிக்கும் வகையில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை சட்டசபைக்குள் கொண்டு சென்று தி.மு.க., உறுப்பினர்கள் காட்டினர்.
தடை செய்யப்பட்ட பொருட்களை அனுமதியின்றி அவைக்குள் கொண்டு வந்தது உரிமை மீறல் செயல் என்று குற்றம் சாட்டி, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. அப்போதைய எதிர்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது
ரத்து
இதை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, உரிமைக்குழு நோட்டீசில் நடைமுறை தவறு உள்ளதாக கூறி அதை ரத்து செய்தது. வேண்டுமென்றால் புதிய நோட்டீசை பிறப்பிக்கலாம் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் புதிய நோட்டீசை உரிமை மீறல் குழு அனுப்பியது. இதை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உரிமைக்குழு நோட்டீசை ரத்து செய்தார்.
விரும்பவில்லை
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், சட்டசபை செயலாளர் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.தனபால் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் சிலம்பண்ணன், ஜெ.ரவீந்திரன் ஆகியோர் ஆஜராகி, இந்த மேல்முறையீடு வழக்கை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்த விரும்பவில்லை என்று கூறினர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.