< Back
மாநில செய்திகள்
மழைக்காலங்களில் துள்ளுமாரி நோயை தடுக்க  ஆடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்  ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
நாமக்கல்
மாநில செய்திகள்

மழைக்காலங்களில் துள்ளுமாரி நோயை தடுக்க ஆடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்

தினத்தந்தி
|
28 Jun 2022 7:26 PM IST

மழைக்காலங்களில் துள்ளுமாரி நோயை தடுக்க விவசாயிகள் ஆடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

நாமக்கல்:

மழைக்காலங்களில் துள்ளுமாரி நோயை தடுக்க விவசாயிகள் ஆடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

மழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 3 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 8 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 4 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்று மணிக்கு 10 கி.மீ.வேகத்தில் மேற்கு திசையில் இருந்து வீசும்.

வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 95 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாக இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 65 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 55 சதவீதமாக இருக்கும்.

துள்ளுமாரி நோய்

சிறப்பு வானிலையை பொறுத்தவரையில் ஆடுகளில் மழைக்காலங்களில் துள்ளுமாரி நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய் நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் புதிதாக முளைத்த பசுமையான புல்வெளியில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளுக்கு இந்நோயின் பாதிப்பு அதிகம் காணப்படும்.

இது எல்லா வயது ஆடுகளை தாக்கினாலும், இளம்வயது ஆடுகளே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. எனவே ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு உள்ள விவசாயிகள், இந்நோய்க்கு எதிரான தடுப்பூசியினை அருகில் உள்ள கால்நடை மருத்துவரின் ஆலோசனைபடி, போட்டு கொள்ள வேண்டும்.

தீவனம்

காற்றின் வேகம் தொடர்ந்து அதிகமாக காணப்படுவதால், தீவனம் வீணடிக்கப்படாமல் பாதுகாத்து கொள்ளும் வியூகங்களில் பண்ணையாளர்கள் ஈடுபட வேண்டும். இன்னும் 2 மாதங்களுக்கு அதிக காற்றின் வேகம் கொண்ட வானிலை நிலவும். தீவன விரயத்தை தடுக்க தீவனத்தில், சிறிதளவு தாவர எண்ணெய் சேர்க்கலாம். இதனால் மதிப்புள்ள வைட்டமின் போன்றவை காற்றில் பறந்து செல்வதை தடுக்க முடியும். மேலும் உயர்மனைகளில் பக்கவாட்டில் படுதாவை கட்ட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்