< Back
மாநில செய்திகள்
பயிர்க்காப்பீடு இழப்பீடு வழங்கியதில் பாரபட்சம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

பயிர்க்காப்பீடு இழப்பீடு வழங்கியதில் பாரபட்சம்

தினத்தந்தி
|
28 Oct 2022 7:58 PM GMT

பயிர்க்காப்பீடு இழப்பீடு வழங்கியதில் பாரபட்சம்

தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு இழப்பீடு வழங்கியதில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தமிழ்நங்கை மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகள் பேசுகையில், "கடந்த சம்பா பருவ பயிர்க்காப்பீடு இழப்பீடு வழங்கப்பட்டதில், தஞ்சை மாவட்டத்துக்கு பாரபட்சமாக காப்பீட்டு நிறுவனம் செயல்பட்டது. மாவட்டத்தில் கடந்த 2021-22 ம் ஆண்டு சம்பா பருவத்துக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை 7 கிராமங்களுக்கு ரூ.36 லட்சம் மட்டுமே கிடைத்தது. இந்த முரண்பாடு குறித்து காப்பீட்டு நிறுவனமும், புள்ளியல் துறையினரும் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து, பயிர்க்காப்பீடு நிறுவனமான அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் விளக்கம் அளிக்கத் தொடங்கினார். ஆனால், விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவரால் பதில் அளிக்க முடியவில்லை. இதையடுத்து, விவசாயிகளை கலெக்டர் சமாதானப்படுத்தினார். பின்னர், புள்ளியல் துறை அலுவலர் பேசுகையில், எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் பயிர் அறுவடை சோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும், 5 ஆண்டு கால சராசரி மகசூல் கணக்கிடுவதற்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை எனவும், அப்பணியைக் காப்பீட்டு நிறுவனமே மேற்கொள்ளும் என்றும் விளக்கம் அளித்தார்.

ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்

பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன்: கடந்த ஆண்டு சம்பா பருவத்தின்போது பெய்த பெரு மழை காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்டதை தமிழக முதல்-அமைச்சர், அமைச்சர்கள் பார்வையிட்டனர். ஆனால், விவசாயிகள் செலுத்திய பிரிமிய தொகை கூட இந்த மாவட்டத்துக்குக் கிடைக்கவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக ஏக்கருக்கு ரூ.5,000 வழங்க தமிழக முதல்-அமைச்சர் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன்: தமிழக முதல்-அமைச்சர் பார்வையிட்ட மதுக்கூர் வட்டாரத்தில் ஒருவருக்குக் கூட பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. எனவே பிரிமீய தொகையை செலுத்துவதால் எந்தப் பயனும் இல்லை என்ற நிலைமை உள்ளது.

வெள்ளை அறிக்கை

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க செயலாளர் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்:- பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் அறுவடை சோதனை ஒளிவுமறைவாக நடத்தப்படுகிறது. எனவே, இத்திட்டம் தொடங்கப்பட்ட காலம் முதல் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். எந்தவொரு காப்பீட்டு நிறுவனத்துக்கும் மாவட்ட அலுவலகம் கிடையாது. எங்கிருந்தோ கணக்கீடு செய்வதால்தான் இப்பிரச்சினை ஏற்படுகிறது.

மதுக்கூர் சந்திரன்:- அருகிலுள்ள திருவாரூர் மாவட்டத்துக்கு ரூ.94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தஞ்சை மாவட்டத்துக்கு 7 கிராமங்களுக்கு ரூ.36 லட்சம் மட்டும் பயிர் காப்பீடு வழங்கியிருப்பது வேதனை அளிக்கிறது. பயிர் காப்பீடு தவறாகக் கணக்கிடப்பட்டதால், விவசாயிகள் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளாக்கியுள்ளனர். எனவே, பயிர் காப்பீடு இழப்பீட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

வைக்கோல் ஏற்றுமதி

அன்னப்பன்பேட்டை எம். செல்வராஜ்: கடந்த 2017- 18-ம் ஆண்டில் பயிர் சேதம் 62 சதவீதம் எனக் கணக்கிடப்பட்டு, அறிவிக்கப்பட்ட ரூ.16,000 இழப்பீடு இதுவரை கிடைக்கவில்லை.

இயற்கை விவசாயி அரூர் தங்கராசு:- தஞ்சை மாவட்டத்தில் இருந்து வைக்கோல் வெளி மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் தஞ்சைமாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே வெளி மாவட்டங்களுக்கு வைக்கோல் ஏற்றுமதி செய்வதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

மேலும் செய்திகள்