கீழடி அகழாய்வில் உடையாத மண் பானை கண்டெடுப்பு
|கீழடி அகழாய்வில் உடையாத மண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மதுரை,
மதுரையை அடுத்த கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தலைமையில் பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 8 குழிகள் தோண்டப்பட்டு, பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய கண்ணாடி பாசி, மணிகள், கருப்பு சிவப்பு மண்பானை ஓடுகள், அகலமான செங்கல்கள், செம்பு பொருட்கள், சுடுமண் கழிவுநீர் குழாய்கள் என பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இதில் ஒரு குழியை மேலும் தோண்டியபோது 5 அடி ஆழத்தில் சிவப்பு நிற சுடுமண்ணால் செய்யப்பட்ட உடையாத பானை கண்டெடுக்கப்பட்டது. பானையின் உயரம் சுமார் 2¼ அடியும், அகலம் 1½ அடி இருக்கும் என கூறப்படுகிறது. பானையில் நிறைந்திருக்கும் மண்ணை முழுமையாக அகற்றி அதில் என்னென்ன பொருட்கள் உள்ளன? என்பதை அறிய தொல்லியல் அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர். அகழாய்வில் இன்னும் ஏராளமான பொருட்கள் கிடைக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.