ராமநாதபுரம்
350 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
|ராமநாதபுரம் அருகே அன்னதானத்திற்காக சேதுபதி மன்னர் ஒரு ஊரை தானமாக வழங்கியதற்கான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகே அன்னதானத்திற்காக சேதுபதி மன்னர் ஒரு ஊரை தானமாக வழங்கியதற்கான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு கண்டுபிடிப்பு
ராமநாதபுரம் அடுத்த சத்திரக்குடி அருகே சே.கொடிக்குளத்தில் கழுநீர் பாலமுருகன் கோவில் வளாகத்தில் ஒரு கல்வெட்டு இருப்பதாக பேரையூர் ஆசிரியர் முனியசாமி கொடுத்த தகவலின் பேரில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு அந்த கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தார். அது அன்னதானத்திற்காக சேதுபதி மன்னர் ஒரு ஊரை தானமாக வழங்கியதை தெரிவிக்கும் 350 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு என்பது ெதரிந்தது. இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர் ராஜகுரு கூறியதாவது:-
4½ அடி உயரமும், 1½ அடி அகலமும் உள்ள ஒரு கடற்கரை பாறை கல்தூணின் இரண்டு பக்கத்தில் கல்வெட்டும், ஒரு பக்கத்தில் செங்கோல், சூரியன், சந்திரனும் கோட்டுருவமாக பொறிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு மொத்தம் 26 வரிகள் கொண்டது. கல்வெட்டு எழுத்துகள் பெரும்பாலும் அழிந்தநிலையில் உள்ளதால் சில சொற்களை கண்டறிய இயலவில்லை. 'ஸ்வஸ்திஸ்ரீ' என தொடங்கி 'போவாராகவும்' என கல்வெட்டு முடிகிறது. புண்ணிய காலத்தில் ரகுநாத திருமலை சேதுபதி காத்த தேவருக்கும், ஆதினாராயன் தேவருக்கும் புண்ணியமாக ரகுநாத தேவர் அன்னதான பற்றுக்கு சே.கொடிக்குளம் என்ற ஊர் சர்வ மானியமாக கொடுக்கப்பட்டுள்ளது. கல்வெட்டில் தமிழ் எண்களில் சக ஆண்டு 1594 என சொல்லப்பட்டுள்ளது. இதன் தற்போதைய ஆண்டு கி.பி.1672 ஆகும்.
ஊர் தானம்
கி.பி. 1646 முதல் 1676 வரை சேதுநாட்டை ஆண்ட ரகுநாத திருமலை சேதுபதி தனக்கும், ஆதினா ராயன் தேவருக்கும் புண்ணியமாக தன் பெயரில் உருவாக்கிய ரகுநாத தேவர் அன்னதான பற்றுக்கு கல்வெட்டுள்ள கொடிக்குளம் என்ற ஊரை தானமாக வழங்கியுள்ளார்.
அன்னதானப்பற்று என்பது அன்னதானம் செய்யும் மடத்திற்கு தானமாக வழங்கிய உரிமை நிலம் ஆகும். இங்கு மன்னர் ஒரு ஊரையே தானமாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வ மானியமாக தான் வழங்கிய இத்தானத்திற்கு கெடுதல் செய்பவர்கள் கெங்கைக்கரையிலும் சேதுக்கரையிலும் மாதா, பிதா, குருவையும், காராம் பசுவையும் கொன்ற தோஷத்திலே போவார்கள் என கல்வெட்டின் இறுதியில் வரும் ஓம்படைக்கிளவி தெரிவிக்கிறது. ஆதினாராயன் தேவர் இவ்வூரை சேர்ந்த சேதுபதிகளின் அரச பிரதிநிதியாக இருக்கலாம்.
அன்னதான கூடம்
புனித நீராட இந்தியா முழுவதும் இருந்து தனுஷ்கோடி, ராமேசுவரம் வருபவர்களுக்கு உணவு, குடிநீர், தங்கும் இடம் வழங்க 5 மைல் தூரத்திற்கு ஒன்று என்ற அளவில் பரவலாக மடம், சத்திரங்களை சேதுபதி மன்னர்கள் உருவாக்கினர்.
இந்த மன்னர்களில் முதன்முதலில் அன்னதான சத்திரங்களை உருவாக்கும் வழக்கத்தை கொண்டுவந்தவர் ரகுநாத திருமலை சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னரால் இந்த ஊரில் கட்டப்பட்ட அன்னதான மடம் கோவிலின் தெற்கு பகுதியில் இருந்து அழிந்துள்ளது. எஞ்சிய அதன் 10 அடி நீளமுள்ள சிறிய சுவர் தற்போதும் உள்ளது.
இந்த கோவிலில் சங்க இலக்கியங்களில் பாலை தினைக்குரியதாக சொல்லப்படும் மருத்துவ குணமுள்ள உகாய் மரம் வளர்ந்து வருகிறது. இம்மரம் ஆங்கிலத்தில் மிஸ்வாக் என அழைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.