< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

சோழர் படை கட்டிய சிவன் கோவில் கண்டுபிடிப்பு

தினத்தந்தி
|
17 May 2023 12:05 AM IST

முதுகுளத்தூர் அருகே சோழர் படையினர் சிவன்கோவில் கட்டி இருப்பதாக தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டு வரும் கல்லூரி மாணவிகள் கூறினர்


முதுகுளத்தூர் அருகே சோழர் படையினர் சிவன்கோவில் கட்டி இருப்பதாக தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டு வரும் கல்லூரி மாணவிகள் கூறினர்.

கள ஆய்வு

ராமநாதபுரம் அருகே உள்ள பால்கரையை சேர்ந்தசி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி மாணவி சிவரஞ்சனி, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு வழிகாட்டுதலில், தொல்லியல் இடங்களை நேரில் கள ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வருகிறார். இவர் முதுகுளத்தூர் அருகே பெருங்கருணையில் திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் டோனிகா, ஸ்ரீவிபின், முகம்மது சகாப்தீன், தீபிகாஸ்ரீ, பார்னியாஸ்ரீ ஆகியோருடன் கள ஆய்வு செய்தார். அப்போது வரலாற்றின் இடைக்காலத்தைச் சேர்ந்த தொல்பொருட்கள், சோழர்களின் வேலைக்கார மூன்றுகைப் படையினர் கட்டிய சிவன் கோவில் போன்ற வரலாற்று சிறப்புகளை கண்டறிந்துள்ளார்.

இதுகுறித்து மாணவி சிவரஞ்சனி மற்றும் மாணவிகள் கூறியதாவது:- பெருங்கருணை என்னும் ஊர் இங்குள்ள கல்வெட்டுகளில் தடங்கழி, பெருங்கருணை சதுர்வேதிமங்கலம், மகாகருணாகிராமம், சிலைமுக்குய நல்லூர் எனவும், ஆங்கிலேயர் காலத்தில் 'வெள்ளந்துறையாகிய பெருங்கருணை' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊர் கண்மாய் தடங்கனி என அழைக்கப்படுவதன் மூலம் இவ்வூரின் பழம்பெயர் தடங்கழி சற்று மருவி இன்றும் நிலைத்திருப்பதை அறியமுடிகிறது. இந்த ஊர் கோவில் கல்வெட்டுகள் மத்திய தொல்லியல் துறையால் 1907-ல் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கல்வெட்டு

இந்த ஊர் சிவன் தற்போது ஸ்ரீஅகிலாண்ட ஈஸ்வரர் எனப்படுகிறார். இங்கு இரு கல்வெட்டுகள் உள்ளன. 'புகழ்மாது விளங்க' எனத் தொடங்கும் கி.பி.1114-ம் ஆண்டு கல்வெட்டு, முதலாம் குலோத்துங்கச் சோழனது 44-ம் ஆட்சியாண்டு முதல் கறியமுதிற்கும், ஆண்டுதோறும் வரும் நான்கு விஷூ அயனங்களுக்கும், மாதந்தோறும் வரும் அமாவாசை பூஜைக்கும் வேளான் காளையவியனான குலோத்துங்கச் சோழ அள்ளுநாடாழ்வான் என்பவர் 11 தடி அளவுள்ள துண்டு நிலங்களை கோவிலுக்கு கொடையாக வழங்கியுள்ளார் என்கிறது.

இந்த கல்வெட்டில் சிவன் பெயர் திருவேளைக்கார மூன்றுகை ஈஸ்வரமுடைய மகாதேவர் என்றுள்ளது. இதன்மூலம் சோழர்களின் வேளைக்கார மூன்றுகைப் படையினர், இக்கோவிலைக் கட்டினர் என்பது உறுதியாகிறது. நெல்லை மாவட்டம் மணப்படைவீடு என்ற ஊர் சிவன் கோவிலும் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் மூன்றுகை படையால் கட்டப்பட்டது ஆகும்.

பானை ஓடுகள்

மேலும், இந்த ஊரில் கள மேற்பரப்பாய்வு செய்தபோது சிவப்பு, கருப்பு பானை ஓடுகள், வட்டச்சில்லுகள், சுடுமண் சக்கரம், மணி செய்யும் கற்கள், கல் குண்டு, இரும்புக் கசடுகள், சங்கு மற்றும் கல் வளையல் துண்டுகள், விலங்கின் பற்கள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இங்கு இரும்பு உருக்காலை இருந்ததை இப்பகுதியில் கிடைத்த இரும்புக் கசடுகள் நிறுவுகின்றன. சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் வரலாற்றின் இடைக்காலமான கி.பி.12-14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பானை ஓடுகள் சிதறிக்கிடக்கின்றன.

இவ்வூரில் வரதராஜப் பெருமாள், பட்டாபிராமர், ஆயிரவல்லியம்மன் கோவில்களும் உள்ளன. தொல்லியல் தடயங்கள் மூலம் கி.பி.12-லிருந்து 19-ம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் இப்பகுதியில் ஒரு முக்கிய ஊராக இவ்வூர் இருந்துள்ளதை அறிய முடிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்