காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்டம் வடக்குப்பட்டு நத்தமேடு அகழ்வாராய்ச்சி பணியில் அரிய வகை பொருட்கள் கண்டெடுப்பு
|காஞ்சீபுரம் மாவட்டத்தில் வடக்குப்பட்டு கிராமத்தில் அகழ்வாராய்ச்சி பணியில் அரிய வகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
அகழ்வாராய்ச்சி பணி
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வடக்குப்பட்டு ஊராட்சியில் உள்ள நத்தமேடு பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3-ந்தேதி தொல்லியல் துறை சென்னை வட்டார தொல்லியல் துறை கண் காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் அகழ்வாராய்ச்சி பணியை தொடங்கியது. பணி தொடங்கப்பட்டு 3 மாதம் நடைபெற்று வந்தது. தொல்லியல்துறை அகழ்வாராய்ச்சி மேற்கொண்டதில் அரியவகை பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
கண்ணாடி மணிகள். வட்ட சில்கள், இரும்பாலான ஆயுதம், சுடுமண்ணால் ஆன பொம்மைகள், முத்திரை சீல், 0.86 மில்லிகிராம் அளவில் 2 தங்க அணிகலன்கள் மற்றும் பழைய கற்காலத்தில் பயன்படுத்திய கருவிகள் உள்ளிட்டவை கிடைத்தது.
அரிய பொருட்கள் கிடைத்தன
இந்த நிலையில் கடந்த மே மாதம் 19-ந் தேதி 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி இந்த பகுதியில் தொடங்கப்பட்டது. தொடர்ந்து ஒரு மாதமாக நடைபெற்று வந்த அகழ்வாராய்ச்சி பணியில் தங்க ஆபரணத்திலான சிறு தகடு, ராஜராஜ சோழன் காலத்து நாணயங்கள், சுடுமன் கருவி, செப்பு சிறிய கிண்ணம், செப்பு கிண்ண மூடி, சுடுமண் பொம்மைகள், செப்பு வளையங்கள் உள்ளிட்ட அரிய பொருட்கள் கிடைத்துள்ளது. அகழ்வாராய்ச்சி பணி முழுமை அடைந்தால் பல்வேறு பொருட்கள் கிடைக்கப்படுவது தெரிய வரும் என தொல்லியல் துறை சார்பில் தெரிவித்தனர்.
தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சியின் போது தங்க ஆபரணங்கள் கண்டெடுக்கப்படும் போது சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் தொல்லியல் துறை சார்பில் கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த்துறையினருக்கு எந்த தகவலும் தெரிவிப்பதில்லை என்று வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.