< Back
மாநில செய்திகள்
பாண்டியர் காலத்து சிலை கண்டெடுப்பு
சிவகங்கை
மாநில செய்திகள்

பாண்டியர் காலத்து சிலை கண்டெடுப்பு

தினத்தந்தி
|
10 Oct 2022 6:43 PM GMT

சிவகங்கை அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாண்டியா்கள் காலத்தை சேர்ந்த சிலை கண்டெடுக்கப்பட்டு உள்ளது.


சிவகங்கை அருகே ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பாண்டியா்கள் காலத்தை சேர்ந்த சிலை கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

பட்டையான கல்

சிவகங்கையை அடுத்த மாங்குடி கிராமத்தைச் சேர்ந்த பூசாரி சிங்கராஜா என்பவர் அந்த பகுதியில் பழங்கால சிற்பங்கள் இருப்பதாக தெரிவித்தார். இதைதொடர்ந்து பாண்டியநாடு பண்பாட்டு மையத்தை சேர்ந்த மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் ஆகியோர் அங்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த சிற்பம் தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் மகன் கசன் என்பவரின் சிலை என்று தெரிந்தது. இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-

மகாபாரதம், மச்ச புராணம், அக்னி புராணங்களின்படி தேவர்களின் குருவான பிரகஸ்பதி என்பவரின் மகன் கசன் ஆவார். அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியாரிடம் இருந்து இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரத்தை கற்றுக் கொண்டு வருவதற்காக பிரகஸ்பதியால் அனுப்பப்பட்டவரே இந்த கசன். இவருடைய சிலையானது தற்போது சிவகங்கை மாவட்டம் மாங்குடி கிராமத்தில் கிடைத்திருப்பது மிகவும் வியப்பாக உள்ளது. இது மூன்றடி உயரத்தில் தலையின்றி காணப்படுகிறது. ஒன்றரை அடி அகலம் கொண்ட பட்டையான கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

மார்பில் முத்து மாலையை அணிந்தும், தனது இடது தோளிலிருந்து மார்பு வழியாக தனது வலது இடுப்பு வரை ஒரு பட்டையான முப்புரி நூல் செதுக்கப்பட்டுள்ளது. இரண்டு கரங்களில் வலது கரத்தில் தாமரை மலரையும், இடது கரத்தை தொடைமீது வைத்தபடி நின்ற கோலத்தில் சிலை செதுக்கப்பட்டுள்ளது, இடையில் இடைக்கச்சை கெண்டைக்கால் வரை உள்ளது.

பாண்டியர் கால...

மேலும் கைகளில் வளையல்களும், கால்களில் அணிகலன்களும் அணிந்தவாறும் சிைல வடிக்கப்பட்டுள்ளது, இந்த சிற்பத்தின் அருகே ஒரு கோமுகி உடைந்த நிலையிலும், இரண்டு சேதமடைந்த தலை பாகங்களும், ஒரு ஐந்துதலை நாகர் சிற்பமும் சிதைந்த நிலையில் இருப்பதைப் பார்க்கும்போது, இங்கு முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த கோவில் இருந்திருக்க வேண்டும் என தெரிகிறது. இந்த சிற்பம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம். இது போன்ற அபூர்வமான கலைநயமிக்க முற்கால பாண்டியர் காலத்தைச்சேர்ந்த சிற்பங்கள் இந்த பகுதியில் தொடர்ந்து கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்