< Back
மாநில செய்திகள்
லால்குடி அருகே கோவிலில் சோழர்கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு
மாநில செய்திகள்

லால்குடி அருகே கோவிலில் சோழர்கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

தினத்தந்தி
|
28 Aug 2022 5:16 AM IST

லால்குடி அருகே உள்ள கோவிலில் சோழர்கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

திருச்சி,

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள திருமங்கலம் சாமவேதீசுவரர் கோவிலில் முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் அகிலா, சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் நளினி ஆகியோர் களஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அவர்கள் சோழர்காலத்தை சேர்ந்த 2 புதிய கல்வெட்டுகளை கண்டெடுத்துள்ளனர். இந்த கல்வெட்டுகளை ஆராய்ந்த டாக்டர் ராசமாணிக்கனார், வரலாற்றாய்வு மைய இயக்குனர் டாக்டர் கலைக்கோவன் கூறியதாவது:-திருமங்கலம் சாமவேதீசுவரர் கோவில் ராமாயண காட்சிகளை தொடர் சிற்பங்களாக பெற்றுள்ள மிக சில தமிழ்நாட்டு கோவில்களில் ஒன்றாகும். 1930-ம் ஆண்டு இந்திய தொல்லியல்துறை இந்த கோவிலில் இருந்து 12 சோழர் கல்வெட்டுகளையும், நாயக்க அரசர் கல்வெட்டுகளையும் படியெடுத்து அவற்றின் சுருக்கங்களை புதுப்பித்துள்ளன. 1993-ம் ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, கூடுதலாக 5 கல்வெட்டுகளை கண்டறிந்து அவற்றின் செய்திகள் பதிப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய ஆய்வு மேலும் 2 சோழர்கால கல்வெட்டுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.

மூன்றாம் ராஜராஜர்

சாமவேதீசுவரர் கோவில் வெளிச்சுற்றிலுள்ள உலகநாயகி அம்மன் திருமுன்னை அடுத்துள்ள தரைப்பகுதியில் கண்டறியப்பட்ட சோழர்கால கல்வெட்டு துண்டுக்கல்வெட்டாகும். மன்னர் பெயரை இழந்துள்ள போதும், அவரது 33-ம் ஆட்சியாண்டை பதிவு செய்துள்ளமையால், கல்வெட்டுக்குரிய மன்னரை மூன்றாம் ராஜராஜசோழராக ஊகிக்க முடிகிறது. இங்குள்ள இவரது 22-ம் ஆட்சியாண்டு கல்வெட்டும் இந்த புதிய கல்வெட்டும் ஒன்றுபோல் எழுத்தமைதி கொண்டுள்ளன.

இந்த கோவில் இறைவனுக்குரிய படையல்களுடன் வழிபாடு நிகழ்த்த திருமங்கலத்துக்கு வடக்கில் இருந்த நிலத்துண்டொன்றை ஒருவர் கோவிலுக்கு வழங்கியுள்ளார். கல்வெட்டுத் துண்டாடப்பட்டிருப்பதால் அவரது பெயரை அறியமுடியவில்லை. கொடையளிக்கப்பட்ட நிலத்தை ஊரவை உரிய தொகை பெற்றுக் கொண்டு வரிநீக்கம் செய்ததையும் இக்கல்வெட்டு பகிர்ந்து கொள்கிறது.

14-ம் நூற்றாண்டு

இரண்டாம் கல்வெட்டு, கோவிலின் உட்புறத்துள்ள திருச்சுற்றுமாளிகையின் மேற்பகுதி உத்திரத்தில் வெட்டப்பட்டுள்ளது. மன்னர் பெயரோ, ஆட்சியாண்டோ இல்லாதபோதும், கல்வெட்டின் எழுத்தமைதி கொண்டு அதனை பொதுக்காலம் 14-ம் நூற்றாண்டுக்குரியதாக கொள்ளலாம். திருவிடைமருதூரில் வசித்த தாழைக்குடியை சேர்ந்த வணிகர் ஆண்டபிள்ளையார் என்பவர் இங்குள்ள சுப்பிரமணியர் திருமுன்னைப் பழுது பார்த்துப் புதுப்பித்து கட்டியதாக கூறும் இக்கல்வெட்டு, கோவில் இறைவன் பெயரை திருமழுவுடையநாயனார் என்கிறது.

இந்தநிலையில் இறைவனுக்கு இன்று வழங்கப்படும் சாமவேதீசுவரர் என்ற திருப்பெயர் எக்காலத்தில் வழக்கிற்கு வந்தது என்பதை அறியக்கூடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

களஆய்வின்போது கோவில் செயல் அலுவலர் ஜெயா, அலுவலர் ஆசைத்தம்பி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்