< Back
மாநில செய்திகள்
சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு
விருதுநகர்
மாநில செய்திகள்

சோழர் கால கல்வெட்டு கண்டெடுப்பு

தினத்தந்தி
|
5 Aug 2022 7:21 PM GMT

சாத்தூர் அருகே சோழர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை,

சாத்தூர் அருகே உள்ள கோல்வார்பட்டி நீர்த்தேக்கம் அருகே உள்ள சிவந்திபட்டி பகுதியில் மக்கள் வழிபடும் கல்லின் மேல்புறத்தில் எழுத்துக்கள் தென்படுவதாக அந்த ஊரை சேர்ந்த என்ஜினீயர் கணேஷ்பாண்டியன் என்பவர் அருப்புக்கோட்டை வரலாற்றுத்துறை உதவிபேராசிரியர் விஜயராகவனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விஜயராகவன் தலைமையில் தொல்லியல் பயிலும் மாணவர்களான ராஜபாண்டி, சரத்ராம், மதன் ஆகியோர் களஆய்வு செய்தனர். அப்போது 6 அடி உயரமும், 2½ அடி அகலமும் கொண்ட ஓர் கல்லில் மேற்புறத்தில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இக்கல்வெட்டை பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வுமைய செயலாளரும், ஓய்வுபெற்ற தொல்லியல் துறை துணை இயக்குநருமான சாந்தலிங்கம் என்பவரின் உதவியோடு படிக்கப்பெற்றது. இந்த கல்வெட்டு 13-ம் நூற்றாண்டை சேர்ந்த மூன்றாம் குலோத்துங்க சோழனின் 32-வது ஆட்சியாண்டில் (அதாவது கி.பி.1210) வெட்டப்பட்ட கல்வெட்டு ஆகும். இருஞ்சோ நாட்டில் உள்ள ஆலங்குடி குளமும், இருப்பைக்குடியில் உள்ள குளமும் தூர்வார்ப்படாமல் பயன்பாடின்றி காணப்பட்டுள்ளது. இதனை ஆலங்குடி அரையனாதிச்சனான அழகிய பாண்டிய கருநிலக்குடி நாடாள்வான் என்பவரும், அவரது படைப்பிரிவான அறநிலை ஒதுக்கிகள் என்ற அமைப்பை சேர்ந்தவர்களும் இந்த இரு குளங்களையும் தூர்வாரி வாய்க்கால் அமைத்துள்ளனர். இதற்காக இவ்வூர் மக்கள் பொற்றனேரி என்ற ஊரில் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களை வழங்கினர். இந்த தகவல் அந்த கல்வெட்டு மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. இருஞ்சோனாடு என்பது தற்போதைய சாத்தூர் பகுதியையும், இருப்பைக்குடி என்பது தற்போதைய இருக்கன்குடியினையும் குறிக்கிறது. விருதுநகர் மாவட்டத்தில் சோழ அரசர்களின் கல்வெட்டுகள் திருச்சுழி, பந்தல்குடி, கோவிலாங்குளம், தொப்பலாக்கரை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் காணப்டுகின்றன. இதில் 3-ம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு எங்கும் இடம் பெறவில்லை. தற்போது சிவந்திபட்டியில் தான் குலோத்துங்க சோழர் கால கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்