விருதுநகர்
எதிர்க்கோட்டையில் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு
|எதிர்க்கோட்டையில் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
தாயில்பட்டி,
எதிர்க்கோட்டையில் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கல்வெட்டு
வெம்பக்கோட்டை தாலுகா எதிர்க்கோட்டை கிராமத்தில் கல்ெவட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சாத்தூைர சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் பாலச்சந்திரன் கூறியதாவது:-
எதிர்க்கோட்டை கிராமத்தில் கரிசல் மண் நிறைந்துள்ளது. இது பருத்தி விளைச்சலுக்கு ஏற்ற பகுதியாகும். பருத்தியை கொண்டு ஆடை நெய்யும் நெசவுத்தொழில் 10-ம் நூற்றாண்டில் சிறந்து விளங்கி உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆடை வணிகம் செய்யும் வணிகர் குடியிருப்பு இப்பகுதியில் இருந்துள்ளது.
இங்குள்ள சுனைக்கு அருகில் ஒரு பாறையில் கல்வெட்டு உள்ளது. அப்போது ஏற்பட்ட போரில் மாகாண குடி ஊரைச்சேர்ந்த கூலிச்சேவகன் இறந்துவிட்டதன் பெயரில் அவர் நினைவாக கோவிலுக்கு பொன் அளித்ததாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
பறை அடிக்க தானம்
இங்குள்ள வேணுகோபாலசாமி கோவில் முற்காலப் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. கோவிலில் தெற்கு சுவரில் உள்ள கல்வெட்டு உதய மார்த்தாண்டபுரம் என அழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது ஆண்ட கோச்சடைவர்மன் என்ற மன்னன் கோவிலுக்கு கிழக்குத்தோட்டமும், 1½ ஏக்கரும் வழங்கியதாக கல்வெட்டுகள் உறுதிப்படுத்தி உள்ளது.
முதலாம் ராஜராஜசோழன், சுந்தர சோழ பாண்டியன், ஆகியோரின் கல்வெட்டுகள் வட்டு எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. கோவில் பூஜை காரியங்களுக்கு பறையடிப்பதற்கும் தானங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 10-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பராந்தக சோழன் கி.பி. 905- 952 பாண்டிய நாட்டு மீது படையெடுத்து பாண்டியர்களை வென்றுள்ளார். பாண்டிய நாட்டின் தென்கோடி வரை சோழர்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். சோழர் ஆதிக்கம் செலுத்தியதாக கல்வெட்டுகளில் உள்ள எழுத்துக்கள் உறுதிப்படுத்தி உள்ளது.
வரலாற்று சான்று
வெம்பக்கோட்டையில் உள்ள சொக்கலிங்க சுவாமி கோவில் பிற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. எதிர்க்கோட்டையில் 9 கல்வெட்டுகள் தற்போது வரை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் 5 கல்வெட்டுகள் பாண்டியர் காலத்திலும், 4 கல்வெட்டுகள் சோழர் காலத்திலும் பொறிக்கப்பட்டது.
இதன் மூலம் முற்கால பாண்டியன், ராஜராஜ சோழன், சோழ பாண்டியன், பிற்கால பாண்டியர்கள் வசித்ததை கல்வெட்டுகள் உறுதி செய்துள்ளன. இந்த பகுதியில் பெருங்கற்கால சங்க கால கருப்பு, சிவப்பு, பானை ஓடுகள் ஏராளமாக கிடைத்து வருகின்றன. ஆற்றுப்பகுதியில் தொன்மையான நாகரீகம் இருந்ததற்கான வரலாற்று சான்றுகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.