சிவகங்கை
சிவலிங்க வடிவம் கொண்ட பழங்கால கருங்கல் கண்டெடுப்பு
|சிவலிங்க வடிவம் கொண்ட பழங்கால கருங்கல் கண்டெடுக்கபட்டது
திருப்புவனம்
திருப்பாச்சேத்தியில் திருநோக்கும் அழகியநாதர் உடனுறை மருநோக்கும் பூங்குழலி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்குள்ள நடராஜருக்கு மார்கழி மாதம் நடைபெறும் திருவாதிரை திருநாளன்று ஏற்படும் செலவினங்களுக்காகவும், ஆண்டுதோறும் நடைபெறும் இத்திருவிழா தங்கு தடையின்றி நடைபெறவும், மன்னர்கள் காலத்தில் திருப்பாச்சேத்தி ஊருக்கு கிழக்கே இருக்கும் கவுண்ட ஊருணியின் மேற்குப் பகுதியில் சந்தைப்பேட்டை என்ற இடம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த சந்தைப்பேட்டை அருகே உள்ள மேட்டுப்பகுதியை சுத்தம் செய்த போது பழமையான சுமார் 3 அடி உயரமுடைய கருங்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் 1½ அடி உயரம் அமைப்புள்ள பழமையான சிவலிங்கம் பூமிக்குள் புதைந்திருப்பது தெரியவந்துள்ளது. இதன் சுற்றளவு 2½ அடி இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இது பற்றி கேள்விப்பட்ட சமூக ஆர்வலர்கள் முத்துக்குமார், சோனைமுத்து, அய்யப்பன் மற்றும் பலர் அங்கு விரைந்து வந்து கருங்கல்லினால் ஆன சிவலிங்கத்தை கைப்பற்றி உரிய இடத்தில் நிறுவி வழிபாடுகள் நடைபெற முயற்சி செய்து வருகின்றனர். திருப்பாச்சேத்தி பகுதியில் ஏற்கனவே பழமையான கருங்கல் சிலைகள் நிறைய கண்டெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.