விருதுநகர்
11-ம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுப்பு
|அருப்புக்கோட்டை அருகே 11-ம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே 11-ம் நூற்றாண்டு பாண்டியர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.
கல்வெட்டு கண்டெடுப்பு
அருப்புக்கோட்டை வரலாற்றுத்துறை பேராசிரியர் விஜயராகவன் மற்றும் தொல்லியல் மாணவர் ராஜபாண்டி ஆகிய இருவரும் திருச்சுழி சுற்றுவட்டார பகுதிகளில் மேற்புற கள ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதியிலுள்ள மூலைக்கரைப்பட்டி என்னும் ஊரில் கண்மாய் கரையின் ஓரமாக கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- மூலைக்கரைப்பட்டி கிராமத்தில் கண்மாய் கரை ஓரமாக 4 அடி உயரமும், அரை அடி அகலமும் கொண்ட ஒரு கல்லின் மேற்புறம் 13 வரிகள் மற்றும் வலதுபுறம் 7 வரிகள் என இருபக்கங்களிலும் எழுத்துக்கள் தென்பட்டன. இதனை ஓய்வுபெற்ற தொல்லியல் இயக்குனரும் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய செயலாளருமான சாந்தலிங்கம் உதவியோடு படிக்கப்பெற்றது. இந்த கல்வெட்டு கி.பி.10 அல்லது 11-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த பாண்டியர்கள் காலத்தை சேர்ந்தது என கருதப்படுகிறது.
கண்மாய் உடைப்பை சரி செய்த வணிகர்
இந்த கல்வெட்டு உள்ள கண்மாய்க்கரையானது மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகரிக்கும்போது உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை இப்பகுதியைச் சேர்ந்த வணிகனான பெற்றான் கழியன் என்பவர் சீரமைத்து கொடுத்துள்ளார். பின்னர் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த வணிகரின் மகளான கோதிலால் நங்கை என்பவள் கற்களைக் கொண்டு உடைப்பு ஏற்பட்ட கரையினை சரிசெய்து அதற்காக இக்கல்வெட்டினையும் ஏற்படுத்தினார் என்று கல்வெட்டு கூறுகிறது. நீரின் முக்கியத்துவத்தை அறிந்த இப்பகுதியை சேர்ந்த வணிகர்களும் நீர்நிலைகளைப் பேணிக்காத்துள்ளனர் என்பதனை இந்த கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.