திருச்சி
காவிரி ஆற்றில் ஐம்பொன் காளி சிலை கண்டெடுப்பு
|காவிரி ஆற்றில் ஐம்பொன் காளி சிலை கண்டெடுக்கப்பட்டது.
முசிறி:
காளி சிலை
திருச்சி மாவட்டம், முசிறி அருகே உமையாள்புரம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் கூலித்தொழிலாளியான செல்லமுத்து(வயது 65) என்பவர் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது காலில் ஏதோ பொருள் ஒன்று தட்டுப்பட்டதால், அவர் அதனை தண்ணீருக்குள் இருந்து வெளியே எடுத்துப் பார்த்தார். அப்போது அது கலைநயம் மிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய காளி சிலை என்பது தெரியவந்தது.
இதையடுத்து செல்லமுத்து அந்த சிலையை எடுத்து வந்து உமையாள்புரத்தை சேர்ந்த மணி என்பவரிடம் கொடுத்துள்ளார். அவர் இது குறித்து செவந்தலிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் யமுனாவிடம் கூறினார். மேலும் இது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற முசிறி தாசில்தார் பாத்திமா சகாயராஜ், அந்த சிலையை கைப்பற்றி தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு வந்தார்.
காப்பறையில் வைக்கப்பட்டது
அந்த காளி சிலை 22 சென்டிமீட்டர் (சுமார் முக்கால் அடி) உயரமும், 1 கிலோ 620 கிராம் எடையும் கொண்டதாக உள்ளது. 10 கரங்களுடன் கழுத்தில் கபால மாலை அணிந்தும், கரங்களில் சங்கு, சக்கரம், அரிவாள், சூலம், கதாயுதம், கேடயம், வில், வெட்டப்பட்ட தலை உள்ளிட்டவற்றை ஏந்தியவாறும், தலையில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய மகுடம் சூடியும், விரித்த தலைமுடியுடன் பீடத்தின் மீது நின்ற கோலத்தில் அந்த காளி சிலை காணப்படுகிறது.
இதையடுத்து தாசில்தார் அலுவலகத்திற்கு பொற்கொல்லர் ஒருவர் அழைத்து வரப்பட்டு, அந்த சிலை சோதிக்கப்பட்டது. சோதனையில் அது ஐம்பொன் சிலை என்பது முதல் கட்டமாக கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த காளி சிலையை பத்திரமாக பெட்டியில் வைத்து பூட்டி 'சீல்' வைக்கப்பட்டு, முசிறி சார்நிலை கருவூல காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
வழிபட்ட மக்கள்
முன்னதாக காளி சிலை கிடைத்தது குறித்து மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், முசிறி கோட்டாட்சியர் ராஜன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த சிலையை காவிரி ஆற்றில் வீசியது யார்? எங்கேனும் கோவிலில் இருந்து திருடப்பட்ட சிலையை, மர்ம நபர்கள் ஆற்றில் வீசிச்சென்றனரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் முசிறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே காளி சிலை காவிரி ஆற்றில் கிடைத்த தகவல் அறிந்து அங்கு கூடிய ஏராளமான பொதுமக்கள், காளி சிலைக்கு பால் அபிஷேகம் செய்தும், பொட்டு வைத்தும், பூச்சூடியும் வணங்கி வழிபட்டது குறிப்பிடத்தக்கது.