விழுப்புரம்
1,200 ஆண்டுகால கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு
|மேல்மலையனூர் அருகே 1,200 ஆண்டுகால கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
விழுப்புரம்:
திருவண்ணாமலை மரபுசார் அமைப்பு தலைவர் ராஜ்பன்னீர், உதயராஜா ஆகியோர் மேல்மலையனூர் அருகே பருதிபுரம் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு வயலில் கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து ராஜ்பன்னீர் கூறுகையில், இந்த சிற்பம் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என்று தெரிகிறது. பலகைக் கல்லில் புடைப்புச்சிற்பமாக கொற்றவை (காளி) வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த கொற்றவை 4 கரங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வலக்கரங்களில் சக்கரம், மணியும், இடக்கரங்களில் சங்கு, ஊறு முத்திரையுடன் இடையில் வைத்தவாறு காட்சி தருகிறார். மேலும் காதுகளில் பனை ஓலை குண்டலமும், கழுத்தில் கூர்மையான ஆரம் போன்ற அணிகலன்களும், கைகளில் அடுக்கடுக்காக வளையல்களும், தலையில் போர்வீரர்கள் அணியும் கவசம் போன்ற மகுடமும் அணிந்து எருமை தலையின் மீது நிமிர்ந்து கம்பீரமாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இது 1,200 ஆண்டு கால பழமை வாய்ந்ததாக இருக்கலாம். இந்த அன்னையை கிராம மக்கள் போற்றி வழிபட்டு வந்தால் இந்த ஊரின் தொன்மை பாதுகாக்கப்படும் என்றார்.