புதுக்கோட்டை
கற்கால மனிதர்களின் வாழ்விடம் கண்டுபிடிப்பு
|திருமயத்தில் கற்கால மனிதர்களின் வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கற்கால மனிதர்களின் வாழ்விடம்
புதுக்கோட்டை அருங்காட்சியக முன்னாள் காப்பாட்சியரும், புதுக்கோட்டை வரலாற்று பண்பாட்டு ஆய்வு மைய தலைவருமான டாக்டர் ராஜா முகமது, மத்திய தொல்லியல் உதவி அலுவலர் முத்துக்குமார், தமிழ் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் கருணாகரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு திருமயத்தில் கற்கால மனிதர்களின் வாழ்விடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜா முகமது தெரிவித்ததாவது:-
மலைகளிலும் குன்றுகளிலும் இயற்கையாக அமைந்த குடைவரைகள், குகைகள் கற்கால- ஆதிகால மனிதனின் வாழ்விடங்களாக பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு இயற்கையாக அமைந்த குகைகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை, அம்மாசத்திரம், குடுமியான்மலை, தேனிமலை, சித்தன்னவாசல் போன்ற பல இடங்களில் காணப்படுகின்றன. தற்போது திருமயத்திலுள்ள குன்றில் (மலை) இதுபோன்ற குகைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த குன்றின் மேற்பகுதியில் தான் கி.பி. 17-ம் நூற்றாண்டை சேர்ந்த கோட்டையும், கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்த சிவபெருமான் மற்றும் விஷ்ணு குடைவரைக் கோவில்களும் உள்ளன. திருமயம் குன்றின் தெற்குச் சரிவில் தொடர்ச்சியாக நான்கு குகைகள் காணப்படுகின்றன. இவை கற்கால மனிதர்களின் வாழ்விடமாக பயன்பாட்டில் இருந்ததற்கான அடையாளங்களும் கிடைக்கின்றன.
மக்களின் பார்வையில் படாமல்...
பெரியதும் சிறியதுமான இந்த நான்கு குகைகளும் குன்றின் தரைமட்டத்திலிருந்து வெவ்வேறு உயரத்தில் அமைந்துள்ளன. மேற்கு திசையிலிருந்து முதலில் காணப்படும் குகையின் முகப்பிலிருந்து உள்பகுதி வரை சுமார் பத்து அடி உயரத்திற்கு மண்ணால் நிரப்பப்பட்டுள்ளது. வாயில் மட்டும் சிறிய திறப்பாகக் காணப்படுகிறது. ஆகவே குகையின் உட்பகுதியின் தன்மைக் குறித்து அறியப்படவில்லை. ஆனால் இதுபோன்ற குகைகளில் மழைத்தண்ணீர் உள்ளே வராமல் இருக்க மேல் முகட்டில் பள்ளமாக வெட்டப்பட்டு இருக்கும். இதுபோன்ற அமைப்பு இங்கும் காணப்படுகிறது. இதே அமைப்பு கொண்ட குகை புதுக்கோட்டை மாவட்டம் மலையடிப்பட்டியில் காணப்படுகிறது.
இரண்டாவதாக உள்ள சிறிய குகை தரைமட்டத்திலிருந்து சுமார் 5 அடி உயரத்தில் உள்ளது. இந்த சிறிய குகையில் சிலர் அமரலாம். மூன்றாவதாக உள்ள குகை சற்று உயரத்தில் உள்ளது. அளவில் சற்று பெரியதாக உள்ள இந்த குகையின் வாயிலின் முன்பக்கம் முழுவதும் சுவர் வைத்து மறைக்கப்பட்டுள்ளது. இதன் உள்பகுதி பரப்பும் அகலமாக உள்ளது. நான்காவதாக உள்ள சிறிய குகையும் உயரத்தில் உள்ளது. இதன் வாயிலும் சுவரால் மறைக்கப்பட்டுள்ளது. பிற்காலக்கட்டங்களில் இவ்வாறு மூடி மறைக்கப்பட்டுவிட்ட காரணத்தால் இவை என்னதென்று புரியாமல் மக்களின் பார்வையில் படாமலேயே இருந்துள்ளது. மேலும் இங்கு இதுபோன்ற குகைகள் இருக்கும் செய்தியும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.
பாறை ஓவியங்கள்
மேற்சொன்ன முதலாவது குகையானது சிவபெருமான் குடைவரை கோவிலுக்குரிய தீர்த்தக் குளத்தை ஒட்டி உள்ளது. குளத்தின் கரையை உயர்த்தி பலப்படுத்துவதற்காக குகையின் உட்பகுதி வரை மண்ணால் நிரப்பப்பட்டுள்ளதை காணலாம். இரண்டாவதாக உள்ள சிறிய குகையின் கூரைப்பகுதியில் பண்டைய பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. சிவப்பு வண்ணத்தில் உள்ள இந்த ஓவியங்கள் சிவப்புக் காவிக்கல் கரைசல் கொண்டு வரையப்பட்டவையாகும். பெரும்பாலான ஓவியங்கள் அழிந்தும் சிதைக்கப்பட்டும் காணப்படுகின்றன. ஆனால் மனித உருவங்கள் சிலவும் மனித கை அச்சு (பிரதி) ஓவியங்கள் சிலவும், நல்ல நிலையில் உள்ளன. இது போன்ற கை அச்சு பிரதியானது ஓவியத்தொகுதியை எழுதியவரின் கையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் இது மந்திர சூனிய வகையைக் குறிப்பது எனவும் சிலர் கூறுகின்றனர். இது போன்ற கை அச்சு ஓவியங்கள் பிரான்ஸ், ஸ்பெயின், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் காணப்படும் பண்டைய குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிறந்த சான்று
தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் செத்தவரை பறை ஓவியத் தொகுதியிலும், திருமயத்திலேயே பிரிதோர் இடத்திலும் காணப்படும் பாறை ஓவியத்தொகுதியிலும் இதுபோன்ற கை அச்சு ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கண்டுபிடிப்பு புதுக்கோட்டையின் தொன்மை வரலாற்றைக் கட்டமைக்க மற்றுமொரு சிறந்த சான்றாக அமைகிறது. இதன்மூலம் திருமயம் பகுதியின் தொன்மை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கவேண்டுமென்பது உறுதியாகிறது. தமிழ்நாட்டில் பிற இடங்களில் காணப்படும் இது போன்ற பாறை ஓவியங்களின் காலம் (குறைந்த அளவாக) கி.மு. 2500-3000மாக இருக்கலாம் என கணக்கிட்டுள்ளனர். ஆகவே திருமயம் பாறை ஓவியத்தின் காலத்தையும் இவ்வாறே கொள்ளலாம்.
திருமயம் குன்றினைச் சுற்றி இதுபோன்ற சிறிய குகைகள் பல இடங்களில் இருந்து அழியபட்டதற்கான எச்சங்கள் தென்படுகின்றன. பிற்காலத்தில் குன்றினை ஒட்டி இணைத்து கோவில் கட்டுமானங்கள் அமைக்கப்பட்ட போது இவை சேதமடைந்திருக்கலாம். திருமயத்தில் தற்போது உள்ள விஷ்ணு பெருமானின் குடைவரை ஒரு இயற்கை குகை என்பதும் பின்னாளில் வரலாற்றுக்காலத்தில் சிற்பங்களுடன் கோவிலாக மாற்றப்பட்டிருக்கிறது. இதுபோன்ற குகைகளின் எச்சங்களை கண்டறியவும் மற்றும் குன்றின் வடக்குபகுதியில் உள்ள உயரமான பாறைகளிலும் மேலும் வரலாற்று தடயங்களை கண்டறியவும், மூடப்பட்டுள்ள குகைகளை ஆய்வு செய்யவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.