மயிலாடுதுறை
வரி செலுத்தாத கட்டிடங்களில் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு
|மயிலாடுதுறையில் வரி செலுத்தாத கட்டிடங்களில் பாதாள சாக்கடை இணைப்பை துண்டித்து நகராட்சி ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டார்.
மயிலாடுதுறையில் வரி செலுத்தாத கட்டிடங்களில் பாதாள சாக்கடை இணைப்பை துண்டித்து நகராட்சி ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டார்.
இணைப்பை துண்டிக்கும் பணி
மயிலாடுதுறை நகரில் சொத்துவரி, பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம், குடிநீர் கட்டணம் செலுத்தாத வர்த்தக நிறுவனங்களில் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கும் பணி நேற்று நடந்தது. முன்னதாக நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தலைமையிலான நகராட்சி அலுவலர்கள் பட்டமங்கலத்தெருவில் உள்ள சொத்து வரி, பாதாளசாக்கடை கட்டணம் செலுத்தாத ஒரு தங்கும் விடுதியில் பாதாள சாக்கடை இணைப்பை துண்டித்தனர். இதேபோல 5 இடங்களில் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சீல் வைக்க நடவடிக்கை
பின்னர் நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி நிருபர்களிடம் கூறுகையில்,
நடப்பு 2022-23-ம் ஆண்டிற்கான சொத்து வரி, பாதாள சாக்கடை கட்டணம், குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்கள் உடனே செலுத்த வேண்டும். தற்போது சொத்து வரி பாக்கி உள்ள நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கான பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்குரிய வாடகை செலுத்தாதவர்கள் கடைகளுக்கும் மூடி சீல் வைக்க நடவடிக்கை தொடங்கப்பட உள்ளது. எனவே வர்த்தகர்கள், பொதுமக்கள் சொத்துவரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் உடனே செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார். அப்போது நகராட்சி மேலாளர் நந்தகுமார், வருவாய் அலுவலர் செல்வி, தலைமை எழுத்தர் தினகரன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.