< Back
மாநில செய்திகள்
பணிக்கு வராவிடில் ஒழுங்கு நடவடிக்கை: மாநகர போக்குவரத்து கழகம் எச்சரிக்கை

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

பணிக்கு வராவிடில் ஒழுங்கு நடவடிக்கை: மாநகர போக்குவரத்து கழகம் எச்சரிக்கை

தினத்தந்தி
|
6 Jan 2024 9:36 PM IST

ஜனவரி 9-ல் வார விடுமுறை, பணி ஓய்வு உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் வருகிற 9-ம் தேதி முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இந்த நிலையில் ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் பணிக்கு வர வேண்டும் என போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது. மேலும், வேலை நிறுத்தம் செய்வது பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்து இருந்தது. ஆனால் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

இதையடுத்து போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் சிவசங்கர் நேற்று பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இதில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை அமைச்சரிடம் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து பேச்சுவார்த்தை முடிந்து பேட்டி அளித்த அமைச்சர் சிவசங்கர் நாளை (7-ந்தேதி) மீண்டும் போக்குவரத்து தொழிற்சங்கங்கத்தினருடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து அமைச்சரின் முடிவுக்காக காத்திருக்கிறோம், அதுவரை போராட்ட முடிவு தொடரும் என போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், வருகிற 9-ந்தேதி தொழிலாளர்கள் பணிக்கு வராவிடில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

பணிக்கு வராத தொழிலாளர் மீது நிலையாணை விதிகளின்படி, சட்டப்பூர்வ ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபடுமாறு தூண்டிவிடுவோர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 9 மற்றும் அதற்கு பின்னர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்படுவதாகவும், ஜனவரி 9-ல் வார விடுமுறை, பணி ஓய்வு உள்ளவர்களும் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்