< Back
மாநில செய்திகள்
மாணவிகள் தூங்கும் போது எனது கணவரை நினைத்துக் கொண்டு தான் தூங்க வேண்டும் - அடாவடி ஆசிரியை
மாநில செய்திகள்

மாணவிகள் தூங்கும் போது எனது கணவரை நினைத்துக் கொண்டு தான் தூங்க வேண்டும் - அடாவடி ஆசிரியை

தினத்தந்தி
|
30 Sept 2022 12:38 PM IST

மாணவிகள் ஒவ்வொரு நாள் தூங்கும் போதும் தனது கணவரை நினைத்துக் கொண்டு தான் தூங்க வேண்டும் என்று பிஞ்சு குழந்தைகளின் நெஞ்சில் நஞ்சை விதைத்த ஆசிரியை மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த காரத்தொழுவு அரசு மேல்நிலைப் பள்ளியில் கணிதப்பாட முதுகலை ஆசிரியராக பணி புரிந்து வருபவர் சாந்திப்பிரியா. இவர் மீது மாணவிகள் தொடர்ச்சியாக பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளனர்.

மாணவி ஒருவரிடம் தீண்டாமை உணர்வுடன் நடந்து கொண்டதாகவும், வேதியியல் ஆய்வகத்தில் அமிலக் குடுவைகளின் அருகில் தனியாக அமர வைத்ததாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளியில் பாடம் நடத்தாமல் குடும்ப விஷயங்களை பேசுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மற்றொரு மாணவியை மருமகளே என்று அழைத்ததுடன் அவரது மகனிடம் பேசச் சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இரவு நேரத்தில் மாணவிகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பாட விஷயமாக பேச வேண்டும் என்று சொல்வதும், பாடம் தவிர்த்து மற்ற விஷயங்கள் பேசியுள்ளார்.

இதனால் அழைப்பை ஏற்க மறுக்கும் மாணவிகளை தேர்வு மதிப்பெண்களின் கை வைப்பேன் என்று மிரட்டியுள்ளார்.மேலும் மற்ற ஆசிரியர்களுடன் சண்டையிட்டு விட்டு வகுப்பறையில் வந்து பழிக்குப் பழி என கரும்பலகையில் எழுதி மாணவர்களின் மனதில் பழி உணர்வை விதைக்கும் விதமாக நடந்து கொண்டுள்ளார்.

அத்துடன் மாணவிகள் அவருடைய காலில் விழுந்து பிளீஸ் என்று கெஞ்சினால் தான் பாடம் நடத்துவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் மாணவிகள் ஒவ்வொரு நாள் தூங்கும் போதும் அந்த ஆசிரியையின் கணவரை நினைத்துக் கொண்டு தான் தூங்க வேண்டும் என்று பிஞ்சு குழந்தைகளின் நெஞ்சில் நஞ்சை விதைத்துள்ளார்.

இதொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் மாணவிகளின் பாதுகாப்பிற்கும், பிற ஆசிரியர்கள் மீது பொய் புகார்கள் அளித்து வருவதால் பள்ளியின் அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதுடன் பள்ளியில் அசாதாரண சூழல் ஏற்படும் என்று பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் அச்சம் தெரிவித்தனர்.

இதனையடுத்து வட்டார கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக்கு வந்த மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் முடிவில் புகார் உண்மை என்று தெரிய வந்ததையடுத்து ஆசிரியை சாந்திப்பிரியா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக பூலாங்கிணறு அரசுப்பள்ளிக்கு மாறுதல் செய்து உத்தரவிட்டார். மாணவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பிக்க வேண்டிய ஆசிரியர் மீது அடுக்கடுக்காக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் பெற்றோரை வேதனையடைய வைத்துள்ளது.

இது குறித்து திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூறியதாவது:-

ஆசிரியை சாந்திப்பிரியாமீது ஏற்கெனவே பல புகார்கள் உள்ளன. ஜல்லிபட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பள்ளியில் பணியாற்றியபோது, தலைமை ஆசிரியரை செருப்பால் அடித்திருக்கிறார். சக ஆசிரியர், மாணவர்களை செல்போனில் புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார்.

ஒரு மாணவியை `மருமகளே' என அழைத்ததுடன், தன் மகனிடம் செல்போனில் பேசச் சொல்லி கட்டாயப்படுத்தியிருக்கிறார். இதனால், அந்த மாணவி தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அந்த மாணவியிடம் பேசிய ஆடியோ ரெக்காட் வைத்து இதை உறுதி செய்திருக்கிறோம். தன் கணவரை நினைத்துக் கொண்டுதான் தூங்க வேண்டும் என்று கூறியதும் விசாரணையில் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், தன்னை சாதிரீதியாக சக ஆசிரியர்கள் தீண்டாமையைப் பின்பற்றுவதாக சாந்திப்பிரியா போலிசில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதால் அவரை பணிநீக்கம் செய்யாமல் வேறு பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்திருக்கிறோம். விசாரணை அனைத்தும் முடிவுற்ற பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்

மேலும் செய்திகள்