< Back
மாநில செய்திகள்
மனித கழிவுகளை மனிதனே அள்ளுவது அவலம்: மாவட்ட கலெக்டர்களை பணியிடை நீக்க நேரிடும் - ஐகோர்ட்டு மதுரை கிளை எச்சரிக்கை
மாநில செய்திகள்

மனித கழிவுகளை மனிதனே அள்ளுவது அவலம்: மாவட்ட கலெக்டர்களை பணியிடை நீக்க நேரிடும் - ஐகோர்ட்டு மதுரை கிளை எச்சரிக்கை

தினத்தந்தி
|
29 Sept 2022 1:49 PM IST

தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என தெரியவில்லை என்று ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகள் வருத்தும் தெரிவித்தனர்.

மதுரை,

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சேர்ந்த அய்யர் என்பவர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், 2013-ம் ஆண்டு சட்டப்படி மனித கழிவுகளை ரோபோட், நவீன எந்திரங்களைக் கொண்டு அகற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதி மகாதேவன், சத்தியநாராயணன் பிரசாத் ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு தாரர் தரப்பில் தூய்மை பணியாளர்கள் உரிய உபகரணம் இல்லாமல் சாக்கடை சுத்தம் செய்யும் புகைப்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த புகைப்படங்கள் தொடர்பான விவரங்களை விரிவாக கோர்ட்டில் சமர்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், புகைப்படம் தொடர்பான தகவல்கள் உண்மையாக இருந்தால் சம்மந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதேபோன்று மனு தாரர் தரப்பில் சமர்பித்த புகைப்படத்தில் தவறு இருக்கும் பட்சத்தில் ஒரு லட்சம் அபராதம் விதிக்க நேரிடும் என்று எச்சரித்தனர்.

மனிதர்கள் கைகளால் சாக்கடைகள், குப்பைகள் போன்றவற்றை சுத்தம் செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறது. இதனை நடைமுறைப்படுத்துவதில் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அலட்சியம் காட்டுகிறார்கள்.

தூய்மை பணியாளர்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என தெரியவில்லை என வருத்தும் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலர் முழுமையான பதில் மனு தாக்கல் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்