திருவாரூர்
பேரிடர் மீட்பு ஒத்திகை
|திருவாரூர் கமலாலய குளத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை தீயணைப்புத்துறை சார்பில் நடந்தது
திருவாரூர்.;
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையொட்டி திருவாரூர் தீயணைப்பு துறை சார்பில் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது குளத்தில் சிக்கி ஒருவர் தத்தளிப்பது போன்றும், அவரை தீயணைப்பு துறையினர் ரப்பர் படகில் சென்று பத்திரமாக மீட்டு வருவது போன்றும் தத்துரூபமாக நடித்து காண்பித்தனர். தீயணைப்பு துறை நிலைய அலுவலர் வடிவேல் பேரிடர் மீட்பு குறித்து விளக்கம் அளித்தாா். இதில் தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் இளஞ்செழியன், நிலைய போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன், சிறப்பு நிலைய அலுவலர் ரவிசந்திரன் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,பருவமழை காலங்களில் ஏற்படும் மழை வெள்ள பாதிப்புகளில் இருந்து தப்பிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் திருவாரூர் கமலாலய குளத்தில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. வெள்ளத்தில் ஒருவர் சிக்கி கொண்டால் பொதுமக்கள் அச்சம் கொள்ள கூடாது. முதலில் கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு அவர்களை மீட்க முயற்சி செய்ய வேண்டும்.அதாவது காலி குடிநீர் பாட்டில்கள், கேன் உள்ளிட்டவைகளை கொண்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கி மீட்கப்படும் நபர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது என கூறினர்.