அரியலூர்
பேரிடர் மீட்பு ஒத்திகை
|பேரிடர் மீட்பு ஒத்திகை நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பேரூராட்சியில் உள்ள வேலப்பன்செட்டி ஏரியில், தேசிய பேரிடர் மீட்புத்துறை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை, பேரிடர் மீட்பு தொடர்புடைய அரசுத்துறையினர் இணைந்து பேரிடர் காலங்களில் ஆபத்தில் உள்ளவர்களை எவ்வாறு மீட்பது தொடர்பான ஒத்திகை பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை, தேசிய பேரிடர் மீட்பு குழு தலைவர் சவுக்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பேரூராட்சி நிருவாகத்தினருடன் சோலைவனம் தொண்டு நிறுவனம் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மூலம் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் தவறி விழுந்தால் அவர்களை எப்படி மீட்பது? என்பன உள்ளிட்ட ஒத்திகைகள் நடத்தப்பட்டன. பின்னர் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் வகையில், வேலப்பன் செட்டி ஏரி கரையில் மரக்கன்றை கோட்டாட்சியர் நட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி மன்றத்தலைவர், துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.