< Back
மாநில செய்திகள்
விழுப்புரத்தில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி
விழுப்புரம்
மாநில செய்திகள்

விழுப்புரத்தில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி

தினத்தந்தி
|
13 Oct 2022 6:45 PM GMT

விழுப்புரம் பூந்தோட்டம் குளத்தில் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையையொட்டி விழுப்புரம் தீயணைப்புத்துறை சார்பில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பூந்தோட்டம் குளத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சியை மாவட்ட தீயணைப்பு அலுவலர் ராஜேஷ்கண்ணன் தொடங்கி வைத்தார். உதவி மாவட்ட அலுவலர் ஜெய்சங்கர், விழுப்புரம் நிலைய அலுவலர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு நிலைய அலுவலர்கள் ராஜவேலு, பாஸ்கர், முன்னணி தீயணைப்பாளர் ஷாஜகான் உள்ளிட்ட தீயணைப்பு பணியாளர்கள் பலர் கலந்துகொண்டு பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சியில் ஈடுபட்டனர்.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

அதாவது பேரிடர் காலங்களில் மீட்புக்குழு வருவதற்கு முன்பாகவே வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை பொதுமக்களே தாமாக முன்வந்து காப்பாற்றும் வழிமுறைகள் குறித்து பயற்சி அளித்தனர். மேலும் தீயணைப்புத்துறை பாதுகாப்பு உபகரணங்களான உயிர் காக்கும் மிதவை, மிதவை உடை, ரப்பர் படகு மூலம் மீட்பது குறித்தும் பொதுமக்களுக்கு செயல்விளக்கம் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், நகரமன்ற கவுன்சிலர்கள் கோதண்டராமன், நவநீதம் மணிகண்டன், ரியாஸ், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்