மெரினாவில் பெண்ணின் கண்ணில் மண்ணை தூவி பணப்பை பறிப்பு
|பணப்பையை பறித்தது தொடர்பாக இருவரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
சென்னை,
சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் நேற்று தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் மெரினா கடற்கரைக்கு காற்று வாங்க சென்றார். விவேகானந்தர் இல்லம் எதிரே உள்ள கடற்கரை மணற்பரப்பில் தனது குடும்பத்தினருடன் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் பிரேம்குமார் மற்றும் அவரது மனைவியின் கண்களில் மணலை அள்ளி வீசினார்கள். அவர்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்து கண்களில் விழுந்த மணலை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரேம்குமாரின் மனைவி வைத்திருந்த பணப்பையை பறித்துக்கொண்டு மர்ம ஆசாமிகள் 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். அந்த பணப்பையில் ரூ.5 ஆயிரம் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து மெரினா போலீஸ் நிலையத்தில் பிரேம்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணப்பையை பறித்து சென்ற கொடுங்கையூரை சேர்ந்த 17 வயது சிறுவன், பெரம்பூரை சேர்ந்த மோகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இன்னொருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.