பெரம்பலூர்
சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் ஆய்வு
|சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் மற்றும் பொருளாதார மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாம்கோ), தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறித்து தனி தனியாக ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குனர் சுரேஷ்குமார் குரும்பலூர், புது ஆத்தூர் ஆகிய இடங்களில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்கள் பெற்ற கடன் உதவித்தொகை மூலம் அமைக்கப்பட்டுள்ள சிறு வணிகங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சிவசங்கரன் உடனிருந்தார்.