புதுக்கோட்டை
இறையூர் கிராமத்தில் நேரடி ஆய்வு: வக்கீல்கள் குழுவின் அறிக்கை புதுக்கோட்டை கோர்ட்டில் சமர்ப்பிப்பு
|இறையூர் கிராமத்தில் வக்கீல்கள் குழுவினர் நேரடி ஆய்வு செய்த அறிக்கையை புதுக்கோட்டை கோர்ட்டில் சமர்ப்பித்தனர். ஜாமீன் மனு மீதான விசாரணையை 10-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இறையூர் விவகாரம்
புதுக்கோட்டை அருகே இறையூர் கிராமத்தில் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம ஆசாமிகள் சிலர் அசுத்தம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதோடு அங்குள்ள அய்யனார் கோவிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுப்பு, டீக்கடையில் இரட்டை குவளை முறை கடைப்பிடிக்கப்பட்டதாக அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து, பட்டியலின மக்களை மாவட்ட கலெக்டர் கவிதாராமு கோவிலுக்கு அழைத்து சென்று வழிபாடு நடத்த அனுமதி அளித்த போது சாமியாடிய சிங்கம்மாள், பட்டியலின மக்களை அவதூறாக பேசியதாக வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
நேரடி ஆய்வு
இதேபோல் இரட்டை குவளை தொடர்பாக டீக்கடை உரிமையாளர் மூக்கையாவும் கைது செய்யப்பட்டார். 2 பேர் மீதும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்திருந்தது. கைதான 2 பேரும் ஜாமீன் கோரி புதுக்கோட்டையில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் இறையூர் கிராமத்தில் உண்மை நிலையை கண்டறிய வக்கீல்கள் கொண்ட குழுவினர் நேரடி ஆய்வு செய்ய நீதிபதி (பொறுப்பு) சத்யா உத்தரவிட்டார். இந்த குழுவில் வக்கீல்கள் செந்தில்குமார், சங்கீதா ஆகியோர் மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் இறையூர் கிராமத்தில் வேங்கைவயலில் வசிக்கும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.
கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிப்பு
இந்த விசாரணை அறிக்கையை வக்கீல்கள் குழுவினர் நேற்று கோர்ட்டில் சமர்ப்பித்தனர். இதைத்தொடர்ந்து ஜாமீன் மனு மீதான விசாரணையில் அவர்களது தரப்பு வக்கீல் ஜாமீன் வழங்க வாதாடினார். இதற்கு எதிர்தரப்பு வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்து வாதாடினர். மேலும் குழுவின் அறிக்கை நகல் தங்களுக்கு வழங்க வேண்டும் என இருதரப்பு வக்கீல்களும் கேட்டனர். இதேபோல் அரசு தரப்பு வக்கீல் குமாரும் தனக்கும் ஒரு நகல் வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை வருகிற 10-ந் தேதிக்கு நீதிபதி சத்யா தள்ளிவைத்தார்.