< Back
மாநில செய்திகள்
சென்னையில் இருந்து ஹாங்காங்குக்கு மீண்டும் நேரடி விமான சேவை
மாநில செய்திகள்

சென்னையில் இருந்து ஹாங்காங்குக்கு மீண்டும் நேரடி விமான சேவை

தினத்தந்தி
|
29 Nov 2023 5:54 AM IST

சென்னை ஹாங்காங் நேரடி விமான சேவை 4 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்கப்பட உள்ளதால் தொழில் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ஹாங்காங்குக்கு 'கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ்' விமான நிறுவனம் மூலம் நேரடி விமான சேவையை இயக்கி வந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சென்னையில் இருந்து உலகம் முழுவதும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

கொரோனா தொற்று பாதிப்பு முடிந்து சகஜ நிலை திரும்பிய பின் சென்னையில் இருந்து பல நேரடி விமான சேவைகள் இயக்கப்பட்டன. ஆனால் ஹாங்காங், ஜித்தா உள்பட பல நகரங்களுக்கு இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடங்காமல் இருந்து வருகிறது.

சென்னையில் இருந்து ஜப்பான், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு ஹாங்காங் விமான நிலையம் இணைப்பு விமான நிலையமாக இருப்பதால், ஹாங்காங்கிற்கு நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்தது.

இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ந் தேதியில் இருந்து கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மீண்டும் ஹாங்காங்-சென்னை இடையே நேரடி விமான சேவையை தொடங்குகிறது. இந்த விமான சேவை வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படுகிறது.

சென்னை ஹாங்காங் நேரடி விமான சேவை 4 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தொடங்கப்பட உள்ளதால் தொழில் துறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்