திண்டுக்கல்: விடுதி மேற்கூரை இடிந்து விபத்து - 5 மாணவிகள் உள்பட 6 பேர் படுகாயம்
|விடுதி மேற்கூரை இடிந்து மாணவிகள் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடி கிராமத்தில் பள்ளி மாணவிகளுக்கான ஆதி திராவிடர் நல விடுதி உள்ளது. இந்த விடுதியில் இன்று காலை மாணவிகள் உணவு அருந்துவதற்காக காத்திருந்த போது திடீரென மேற்கூரை இடிந்து அங்கு இருந்த பள்ளி மாணவிகள் மேல் விழுந்தது.
இந்த விபத்தில் 5 பள்ளி மாணவிகள், சமையலர் ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர். இதில் விடுதியின் சமையலருக்கும், மாணவி ஒருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அனைவரையும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விடுதி ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மேற்கூரை குறித்து ஏற்கனவே மாவட்ட கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மேற்கூரை குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விடுதி ஊழியர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.