திண்டுக்கல்: ஜாமீனில் வெளிவந்த வாலிபர் வீடு புகுந்து வெட்டிக்கொலை
|வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த வாலிபரை மர்ம நபர்கள் வீடு புகுந்து வெட்டிக்கொன்ற சம்பவம் திண்டுக்கல்லில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மேட்டுப்பட்டி, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் வினோத் (வயது 31). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய மனைவி, தனது குழந்தைகளுடன் வினோத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் வீட்டில் வினோத்துடன் அவரது தாயும், அக்காளும் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று இரவு 9.15 மணி அளவில் வினோத் தனது வீட்டில் அமர்ந்து இரவு உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அவருடைய தாயும், அக்காளும் சமையல் அறையில் இருந்தனர். அப்போது மர்ம நபர்கள் 3 பேர் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வினோத்தின் வீட்டுக்குள் திபு, திபுவென்று புகுந்தனர்.
அவர்களை பார்த்த வினோத் சுதாரிக்க முயன்றார். ஆனால் அதற்குள், 3 பேரும் சேர்ந்து வினோத்தை சரமாரியாக வெட்டினர். இதில், வலியால் அலறிதுடித்த வினோத் உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு தாயும், அக்காளும் ஓடி வந்தனர்.
ஆனால் அவர்கள் வருவதற்குள் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த வினோத் சிறிது நேரத்தில் பலியானார். ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடந்ததை பார்த்து அவருடைய குடும்பத்தினர் கதறி அழுதனர். இதற்கிடையே அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர், திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக்கல் பாரதிபுரம் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த சுள்ளான் என்ற ரமேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் வினோத்துக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் பழிக்குப்பழியாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.