< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்: பைக் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
மாநில செய்திகள்

திண்டுக்கல்: பைக் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

தினத்தந்தி
|
3 Aug 2024 4:49 PM IST

பைக் மீது கார் மோதிய சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அருகே உள்ள ரெண்டலப்பாறையை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 30). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அருணா (28). இவர்களுக்கு ரக்ஷிதா (7) என்ற மகளும், ரக்ஷன் (5) என்ற மகனும் உள்ளனர். இன்று அருணாவின் தாய் சரோஜாதேவி (60) என்பவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு ஜார்ஜ் தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல்-நத்தம் சாலையில் வந்து கொண்டிருந்தார்.

நல்லாம்பட்டி அருகே இவர்கள் வந்து கொண்டிருந்த போது எதிரில் நத்தம் நோக்கி வந்த ஒரு கார் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜார்ஜ் பைக்கின் மீது மோதி சுமார் 100 மீட்டர் தூரம் இழுத்துச் சென்றது. அப்போது மற்றொரு பைக்கில் வந்த நொச்சி ஓடைப்பட்டியை சேர்ந்த குழந்தைசாமி என்பவர் மீதும் மோதியது.

இதில் ஜார்ஜ், அருணா, அவரது 2 குழந்தைகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் காரை ஓட்டி வந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலியான 4 பேர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காயமடைந்த சரோஜாதேவி உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்