< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி செய்தி எதிரொலி: அரிமளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில்  அமைச்சர் ரகுபதி ஆய்வு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

'தினத்தந்தி' செய்தி எதிரொலி: அரிமளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் ரகுபதி ஆய்வு

தினத்தந்தி
|
20 March 2023 12:16 AM IST

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக அரிமளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் ரகுபதி ஆய்வு மேற்கொண்டார்.

அரிமளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள டாக்டர்கள் மற்றும் நர்சு பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து உசிலம்பட்டி வடமாடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற அமைச்சர் ரகுபதி அரிமளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் நர்சு மற்றும் பணியாளர்கள் மட்டுமே இருந்து உள்ளனர். உடனடியாக சுகாதாரப்பணிகள் இணை இயக்குனரை தொடர்பு கொண்டு பேசிய அமைச்சர் ரகுபதி, மருத்துவமனைக்கு ஏன் டாக்டர் இன்னும் வரவில்லை என கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் டாக்டர் விடுப்பில் சென்றதாக கூறியுள்ளார். இதையடுத்து ஒரு டாக்டர் விடுப்பில் சென்றால் மாற்றுப் பணிக்கு வேறு ஏதாவது டாக்டரை நியமிக்க வேண்டாமா?. இனிமேல் இதுபோன்று டாக்டர்கள் இல்லாமல் மருத்துவமனை செயல்படக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் மருந்து, மாத்திரைகள் பற்றாக்குறை உள்ளதா? என அங்கு இருந்த பணியாளர்களிடம் கேட்டுள்ளார். அப்போது பணியாளர்கள் மருந்து, மாத்திரைகள் அனைத்தும் தேவைக்கேற்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர். பின்னர் சுகாதார நிலையத்தில் புதிதாக கட்டிடம் கட்ட இருப்பதால் கட்டிடம் விரிவுபடுத்த தேவையான இடங்கள் உள்ளதா? என ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடம் மருத்துவமனையில் குறைகள் இருந்தால் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றால் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என கூறினார். மேலும், 24 மணி நேரமும் மக்களுக்கு சேவையாற்றும் வகையில் டாக்டர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் இருக்க வேண்டும் என அறிவுறுத்திவிட்டு அங்கிருந்து சென்றார்.

மேலும் செய்திகள்