ஈரோடு
'தினத்தந்தி' செய்தி எதிரொலிமரவள்ளிக்கிழங்கு தோட்டங்களில் வேளாண்மை அதிகாாி ஆய்வு
|‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் அம்மாபேட்டை பகுதியில் உள்ள மரவள்ளிக்கிழங்கு தோட்டங்களில் வேளாண்மை அதிகாரி ஆய்வு செய்தார். அப்போது அவர் ‘செம்பேன்’ பூச்சி தாக்குதலை கட்டு்ப்படுத்த விளக்கம் அளித்தார்.
அம்மாபேட்டை
'தினத்தந்தி' செய்தி எதிரொலியால் அம்மாபேட்டை பகுதியில் உள்ள மரவள்ளிக்கிழங்கு தோட்டங்களில் வேளாண்மை அதிகாரி ஆய்வு செய்தார். அப்போது அவர் 'செம்பேன்' பூச்சி தாக்குதலை கட்டு்ப்படுத்த விளக்கம் அளித்தார்.
அதிகாரி ஆய்வு
அம்மாபேட்டை வட்டாரத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிர் சுமார் 700 எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பூதப்பாடி, கன்னப்பள்ளி, இலிப்பிலி, குறிச்சி மற்றும் சென்னம்பட்டி பகுதியில் உள்ள தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு பயிர்களை செம்பேன் பூச்சி தாக்கியுள்ளது. இதனை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' வேளாண்மை செய்திகள் பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அம்மாபேட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சி.சசிகலா நேற்று அம்மாபேட்டை பகுதியில் உள்ள குருவரெட்டியூர் கிராமம் தண்ணீர்பந்தல்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்யப்பட்டுள்ள தோட்டங்களில் ஆய்வு செய்தார். அப்போது பயிரில் 'செம்பேன்' பூச்சி தாக்குதல் கூடுதலாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்துவது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செம்பேன் இனப்பெருக்கம்
பொதுவாக 5 முதல் 6 வயதுடைய மரவள்ளிப் பயிரில் 'செம்பேன்' பூச்சி தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அதிக சேதம் ஏற்படுகிறது. செம்பேன் பூச்சி தாக்குதலுக்கு உள்ளான செடியில் நுனிப்பகுதியில் இருந்து பச்சையம் இழந்து மஞ்சள் நிறத்துடன் காணப்படுவதுடன் அவை பழுத்து உதிர்ந்து விடுகிறது. பொதுவாக மழைக்காலங்களில் செம்பேன் இனப்பெருக்கம் குறைவாக இருக்கும்.
தற்போது மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் அதன் தாக்கம் குறைந்து காணப்படும். இருப்பினும் தாக்கம் அதிகம் இருப்பின் ஓமைட் என்ற பூச்சிக்கொல்லி மருந்தை ஒரு மில்லி லிட்டர் என்ற அளவில் ஒரு லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.
கட்டுப்படுத்தலாம்
மேலும் பூஞ்சான் தாக்குதல் காணப்பட்டால் வெட்டபில் சல்பர் அல்லது காப்பர் ஆக்சி குளோரைடு ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பூஞ்சை கொல்லியை ஒரு லிட்டர் தண்ணீர் உடன் 3 கிராம் வீதம் கலந்து 7 நாட்கள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும். கைத்தெளிப்பான் மூலம் செடியின் அனைத்து பாகங்களிலும் படும்படி காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிப்பதன் மூலம் செம்பேன் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.
இவ்வாறு தோட்டக்கலை உதவி இயக்குனர் சி.சசிகலா கூறியுள்ளார்.