மதுரை
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
விபத்து அபாயம்
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் எல்லீஸ் நகர் அரசரடி சந்திப்பில் பெரிய பள்ளம் இருக்கிறது. இந்த பள்ளத்தால் இந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான இந்த பள்ளத்தை விரைவாக சரிசெய்ய வேண்டும்.
செந்தில், மதுரை.
திறப்பு விழா காணப்படுமா?
மதுரை மாவட்டம் சோழவந்தான் பஸ் நிலையம் கட்டிமுடிக்கப்பட்டு பல வருடங்களாகியும் இன்னும் பயணிகளின் பயன்பாட்டிற்காக திறந்து விடப்படாமல் மூடியபடி உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் பஸ்கள் அனைத்தும் சோழவந்தான் தென்கரை இனைப்பு பாலத்தில் ஆங்காங்கே நிறுத்துவதால் இப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே சோழவந்தான் பஸ் நிலையத்தை விரைவில் பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுரிநாதன், சோழவந்தான்.
பணிகள் விரைந்து முடிக்கப்படுமா?
மதுரை மாநகராட்சி பழங்காநத்தம் பகுதியில் சாலை சீரமைப்பு மிகவும் தாமதமாக நடப்பதால் வாகனங்கள் செல்வதற்கு சிரமமாக உள்ளது. எனவே டி.பி.கே. ரோட்டில் சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகுமார், மதுரை.
சேதமடைந்த சாலை
மதுரை கிழக்கு பகுதியில் புதிதாக போடப்பட்ட சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலை முறையாக போடப்படாததால் பள்ளங்கள் உருவாகியுள்ளன. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளங்கோ, மதுரை.
குடிநீர் பற்றாக்குறை
மதுரை வில்லாபுரம் குடியிருப்பு பகுதிக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது 6நாட்களுக்கு ஒருமுறையே தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மேலும் வினியோகிக்கப்படும் குடிநீரும் சில சமயங்களில் மாசடைந்து வருகிறது. எனவே இப்பகுதியில் முறையாக தண்ணீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதயஅகிலன், மதுரை.