ராமநாதபுரம்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கிடாரம் ஊராட்சியில் உள்ள 5,6,7,8-வதுவார்டுகளை உள்ளடக்கிய குடியிருப்பு பகுதிகளில் கருவேலமரங்கள் வளர்ந்து புதர் மண்டிகிடக்கின்றன. இதனால் அந்த தெருக்களில் நடந்து செல்லும் போது முட்கள் குத்தி பொதுமக்கள் அவதிபடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருவேலமரங்களை வெட்டி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏ.முனியசாமி, காவாகுளம்.
ஆபத்தான மின்கம்பம்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா சிறுதலை ஊராட்சிக்கு உட்பட்ட சுவாத்தான் கிராமத்தில் குளத்தின் நடுவில் மின்கம்பம் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே மின்கம்பம் சாய்வதற்கு முன்பு இதனை அகற்றி அதிகாரிகள் புதிய மின்கம்பத்தை குளத்தின் கரையில் இடமாற்ற வேண்டும்.
ஜெயசந்திரன், முதுகுளத்தூர்.
குண்டும் குழியுமான சாலை
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவை சுற்றியுள்ள கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன.இதனால் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்பவர்கள் அவதிப்படுகின்றனர்.மழைக்காலங்களில் சாலையில் உள்ள குழிகளில் நீர் தேங்கி கிடக்கிறது.எனவே சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஏர்வாடி.
சாலை ஆக்கிரமிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் வண்டிக்கார தெருவையும் சிகில் ராஜ வீதியையும் இணைக்கும் தென்வடல் சவேரியார் கோவில் தெருவின் இருபுறமும் அதிக அளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு ரோடு குறுகலாகி விட்டது. இதனால் வாகனப் போக்குவரத்துக்கும் மக்கள் நடமாட்டத்திற்கும் இடையூறாக உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்வர்தீன், ராமநாதபுரம்.
வாகன ஓட்டிகளுக்கு இடையூறு
ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் செல்லும் பிரதான சாலையின் இருபுறமும் கற்களை கொண்டு வந்து போட்டுவிட்டு சென்றுள்ளனர்.இதனால் அவ்வழியாக வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.எனவே அதிகாரிகள் சாலையில் உள்ள கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முனியசாமி, வாலிநோக்கம்.