விருதுநகர்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருநாய்கள் தொல்லை
விருதுநகர் நகர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் உள்ள தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், விருதுநகர்.
தண்ணீர் பற்றாக்குறை
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அளவு குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீர் இன்றி சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சீராக தண்ணீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சரவணக்குமார், ராஜபாளையம்.
ஓடையை தூர்வார வேண்டும்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் பி.ராமச்சந்திரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணார் பட்டியில் வாருகால் இல்லாததால் மழை பெய்தால் காட்டில் உள்ள தண்ணீர் ஊரின் ஓடை வழியாக வருவது வழக்கமாக இருந்து வருகிறது. தற்போது அந்த ஓடை செடி, கொடிகள் மற்றும் மணலால் மூடி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடையை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொன்னுச்சாமி, பி.ராமச்சந்திரபுரம்.
ஒளிராத மின்விளக்கு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மெயின்ரோடு போலீஸ் நிலையம் அருகில் முக்குராந்தல் பகுதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு ஒளிராமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள், குழந்தைகள் சாலையில் செல்ல அச்சப்படுகினறனர். எனவே மின்விளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனந்தன், சாத்தூா்.
சுகாதார சீர்கேடு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாசலபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட என்.ஜி.ஓ. காலனி பகுதியில் உள்ள வீடுகளுக்காக தாமிரபரணி கூட்டுக்குடிநீர் தொட்டி மற்றும் வெங்கடாசலபுரம் ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் தொட்டி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. தொட்டிகளில் இருந்து வெளியேறும் உபரிநீர் தொட்டிக்கு கீழே தேங்கிநிற்கிறது. இந்த தண்ணீர் கழிவுநீராக மாறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், வெங்கடாசலபுரம்.