மதுரை
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சரி செய்யப்படுமா?
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் கல்லணை ஊராட்சிக்கு உட்பட்ட லெட்சுமிபுரத்தில் குடிதண்ணீர் வசதி சரியாக இல்லாத காரணத்தினால் இந்தப் பகுதியில் வரதராஜ பெருமாள் கோவில் அருகில் இருக்கும் அடி தண்ணீர் குழாயை பயன்படுத்தி வந்தனர். இந்த குழாய் தற்பொழுது பழுதடைந்து உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் தண்ணீருக்கு சிரமப்படும் நிலை உள்ளது. எனவே இந்த அடிகுழாயை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணன், லெட்சுமிபுரம், மதுரை.
கருவேல மரங்களை அகற்ற வேண்டும்
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா மருதங்குடி கிராமத்தில் உள்ள கண்மாய் மறுகால் வாய்க்கால் கரையில் உள்ள பொதுப்பாதையில் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்து உள்ளன. இந்த பாதையை பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கருவேல ஆக்கிரமிப்பால் இவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பாதையில் உள்ள கருவேல மரங்களை அகற்றி மெட்டல் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரஞ்சித்குமார், மருதங்குடி.
பயன்பாட்டிற்கு வருமா?
மதுரை மாவட்டம் சோழவந்தானில் பஸ் நிலையம் கட்டிமுடிக்கப்பட்டும் பயணிகள் பயன்பாட்டிற்கு வராமல் மூடியே கிடக்கிறது. எனவே இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
கவுரிநாதன், சோழவந்தான்.
குண்டும், குழியுமான சாலை
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி மெயின் ரோட்டில் ஊர் நுழையும் முன்பிலிருந்து ஊர் முடியும் வரை பல இடங்களில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக ரோடு உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருவோருக்கு விபத்து ஏற்படும் நிலையும் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதன், டி.கல்லுப்பட்டி.
வீணாகும் குடிநீர்
மதுரை மாநகராட்சி திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி. ரோட்டில் காவிரி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருப்பரங்குன்றம்.