< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
சிவகங்கை
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
22 Feb 2023 6:38 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வாகன ஓட்டிகளுக்கு சிரமம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பஸ் நிலையம் பகுதியில் சிலர் இருசக்கர வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்துகின்றனர். குறிப்பாக காலை, மாலை வேளைகளில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே இதற்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீனிவாசன், காரைக்குடி,

குறுகலான சாலை

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து மதுரை வரும் மெயின்சாலையில் தி.ரனசிங்கபுரம், கோட்டையிருப்பு, கருப்பூர் மற்றும் எஸ்.எஸ். கோட்டை சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றது.சாலைகளும் குறுகிய நிலையில் காணப்படுவதால் அந்த வழியாக வரும் கனரக வாகனஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையை அகலப்படுத்தி சீரமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தர்ராஜ், திருப்பத்தூர்,

சாலை சீரமைக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றது. இதனால் இருசக்கர வாகனஓட்டிகள் சாலையில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் வாகனங்களும் அவ்வப்போது பழுதடைகின்றது. எனவே சாலையை சீரமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெற்றிவேல், சிங்கம்புணரி,

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் வைணவ பூமியாகவும், தொழிலில் சிறந்த நகராக விளங்குவதால் இங்கு வருவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் சிவகங்கையில் இருந்து இப்பகுதிக்கு மதிய வேளைகளில் இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சிவகங்கையில் இருந்து திருக்கோஷ்டியூருக்கு கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவின், திருக்கோஷ்டியூர்

ஆபத்தான பயணம்

சிவகங்கை மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் பள்ளி- கல்லூரி மாணவர்கள் சிலர் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இதனால் எதிர்பாராதவிதமாக விபத்துகள் நேரிட வாய்ப்பு உள்ளது. எனவே படிக்கட்டுகளில் செய்யும் பயணங்களுக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகாராஜன், சிவகங்கை,

Related Tags :
மேலும் செய்திகள்