ராமநாதபுரம்
'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு
ராமநாதபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இந்த கருவேல மரங்களினால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்படைவதுடன், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நகரில் காணப்படும் கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பன்னீர்செல்வம், ராமநாதபுரம்,
வாகன நிறுத்தும் இடம் தேவை
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் சுற்றலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இவ்வாறு வரும் பயணிகள் சிலர் தங்கள் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை சாலையில் ஆங்காங்கே நிறுத்தி செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடையூறுகள் ஏற்படுகின்றது. எனவே வாகனங்களை நிறுத்துவதற்கு நிறுத்தும் இடத்தை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், தனுஷ்கோடி,
குவிந்து கிடக்கும் குப்பைகள்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி புறநகர் சாலையோர பகுதிகளில் சில இடங்களில் குப்பைகள் குவிந்து காட்சியளிக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும் காற்றில் பரக்கும் குப்பைகள் வாகனஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றது. எனவே குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கரபாண்டியன், ராமநாதபுரம்
குடிநீர் தட்டுப்பாடு
ராமநாதபுரம் மாவட்டம் பிச்சங்குறிச்சி ஊராட்சி சீனாங்குடி கிராமத்தில் சுமார் 200-க்கும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் போதிய குடிதண்ணீர் வசதி இல்லாததால் பக்கத்து கிராமத்திற்கு சென்று குடிநீர் எடுக்கும் நிலை உள்ளது.எனவே இந்த பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேஷ், சீனாங்குடி,
சுகாதார சீர்கேடு
ராமநாதபுரம் நகராட்சி 2-வது வார்டு வடக்கு தெரு பகுதியில் பாதாள சாக்கடை நிறைந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ராமநாதபுரம்,