புதுக்கோட்டை
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நோயாளிகள் அவதி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, மறமடக்கி 108 ஆம்புலன்ஸ் கடந்த ஒரு மாதமாக பிராணவாயு கொடுக்கும் ஓ2 கேஜ் மீட்டர் மற்றும் சிலிண்டருக்கு செல்லும் டியூப் இல்லாமல் இயக்கப்படுகிறது. இதனால் மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சுவலி போன்ற அவசர நோயாளிக்கு ஆக்சிஜன் கொடுக்க முடியாமல் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நோயாளிகள், மறமடக்கி.
நம்பர் இல்லாத நம்பர் பிளேட்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான வாகனங்கள் சாலைகளில் செல்கின்றன. இதில் சில இருசக்கர வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் நம்பர்களை முறையாக எழுதாமல் அவற்றை மாடல் மாடலாக எழுதுவதினால் அந்த வண்டி நம்பரை எளிதில் கண்டு பிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் சிலர் தங்களின் வண்டி நம்பரை நம்பர் பிளேட்டில் எழுதாமல் தங்களின் பெயர்களை எழுதிக் கொண்டு சென்று வருகின்றனர். இதனால் இந்த வாகனங்கள் விபத்து ஏற்படுத்தி விட்டு செல்லும் போது அந்த வாகனங்களை கண்டுபிடிக்க முடியாதநிலை ஏற்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வாகன ஓட்டிகள், புதுக்கோட்டை.
கூடுதல் நகர பஸ்கள் இயக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், பாலக்குறிச்சியில் இருந்து நகரப்பட்டி, ஆலவயல் வழியாக பொன்னமராவதிக்கு காலை, மாலை நேரங்களிலும், பொன்னமராவதி பகுதியில் இருந்து ஆலவயல், நகரப்பட்டி வழியாக பாலக்குறிச்சிக்கும் காலை, மாலை நேரங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாக நகர பஸ் வசதி இல்லை. எனவே பள்ளி மாணவர்கள் மற்றும் மகளிர் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் நகர பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பொன்னமராவதி.
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், பழைய ஆதனக்கோட்டை முத்துராஜா தெரு மேலத்தெருவில் இருந்து குடியிருப்புகள் வழியாக செல்லும் வத்தனாக்கோட்டை சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பழைய ஆதனக்கோட்டை.