அரியலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேறும், சகதியுமான சாலை
அரியலூர் மாவட்டம், வீ.கைகாட்டியில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் சின்ன நாகனூர் பாதையில் இருந்து அஸ்தினாபுரம் பஸ் நிலையம் வரை சுண்ணாம்புக்கல் துகள்கள் சாலையில் கொட்டுவதால் தற்போது மழை காலம் துவங்கிவிட்ட நிலையில், அதன் மீது மழை பெய்யும்போது அவ்வழியாக செல்லும் வாகனங்களினால் அந்த சாலை சேறும், சகதியுமான சாலையாக மாறிவிடுகிறது. இதனால் இந்த வழியாக சைக்கிள், இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வாகன ஓட்டிகள், காட்டுப்பிரிங்கியம்.
சிறிய கட்டிடத்தில் இயங்கும் நூலகம்
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், அசாவீரன்குடிக்காடு கிராமத்தில் ஊர்ப்புற நூலகம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் சொந்த கட்டிடம் இல்லாமல் சிறிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இங்கு புத்தகங்களை அடுக்கி வைக்கக்கூட இடம் இல்லாமல் மூட்டை மூட்டைகளாக கிடக்கின்றன. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ள இந்த நூலகத்திற்கு மாணவர்கள் மற்றும் வாசகர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் அரசு கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராவணன், அசாவீரன்குடிக்காடு.
குரங்குகள் தொல்லை
அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி நெருஞ்சிக்கோரை கிராமத்தில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இவை இப்பகுதியில் உள்ள வீடுகளில் வைக்கப்படும் உணவு மற்றும் மளிகை பொருட்களை எடுத்துச்செல்வதுடன், கீழே கொட்டி நாசம் செய்து வருகிறது. மேலும் தென்னை, மா, கொய்யா மரங்களை சேதப்படுத்தி வருகிறது. மேலும் குழந்தைகளை கடிக்க வருவதினால் பெற்றோர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வீரா, நெருஞ்சிக்கோரை.
கீழே விழும் வாகன ஓட்டிகள்
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் பள்ளி குழந்தைகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ஆண்டிமடம்.