< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
18 Jun 2023 11:13 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 11 தாலுகாக்கள் உள்ளன. அதில் 93 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய லால்குடி தான் மிகப்பெரிய தாலுகாவாக திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. திருச்சியில் இருந்து லால்குடி செல்வதற்கு நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை பிரிந்து செல்கிறது. இந்த சாலை ஆரம்பிக்கும் இடத்திலிருந்து முதல் 200 மீட்டர்கள் தூரம் வரை கடந்த 3 ஆண்டுகளாக சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக வாகன போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதில் 5 பள்ளங்கள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இதில் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் செல்வதில் கூட சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள், நம்பர் ஒன் டோல்கேட்.

பஸ் வசதி வேண்டும்

திருச்சி மாவட்டம், லால்குடி நகரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான மக்கள் மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பட்டூர் பிரம்மா கோவிலுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். இதற்காக நம்பர் 1 டோல்கேட் சென்று மாற்று பஸ் ஏறி சுற்றி செல்ல வேண்டி உள்ளது. ஆகையால் லால்குடியில் இருந்து பூவாலூர், தச்சன்குறிச்சி, சிறுகனூர் வழியாக வெறும் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்பட்டூர் பிரம்மா கோவிலுக்கு நேரடியாக தொடர்ச்சியாக பஸ் இயக்க சமந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், லால்குடி.

புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி நகரில் இருந்து குளித்தலை வழியாக கரூர், ஈரோடு, கோவை, ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பராமரிப்பு பணிகளை சம்பந்தப்பட்ட துறை மூலம் மேற்கொண்டனர். சாலை பராமரிப்பு முடிந்தவுடன் சாலையில் வாகனங்கள் செல்வதற்காக ஒளிரும் வெள்ளை நிற கோடுகள் சாலையின் ஒரு திசையில் அடித்துவிட்டு, மறு திசையில் அடிக்காமல் விட்டு விட்டார்கள். இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் சீரற்று செல்கிறது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் வெள்ளி நிற கோடு அடித்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் நன்றி தெரிவித்தனர்.

வாகன ஓட்டிகள், திருச்சி.

பள்ளத்தால் பொதுமக்கள் அவதி

திருச்சி கிழக்கு பாலக்கரை காஜா மொய்தீன் தெருவில் பாதாளா கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இந்த பள்ளம் சரிவர மூடப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நசீர், பாலக்கரை.

மேலும் செய்திகள்