< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
18 Jun 2023 5:31 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குளத்தில் கலக்கும் கழிவுநீர்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் நகரில் உள்ள தாவரங்குளம் என்று அழைக்கப்படும் விவசாயத்திற்கு ஆதாரமாக இருக்கும் குளத்தில் இன்று கழிவுநீர் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இஸ்மாயில், கீரனூர்.

தூர்வாரப்படாத பேராம்பூர் பெரிய ஏரி

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம் பேராம்பூரில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய நீர்ப்பாசன ஏரி உள்ளது. விராலிமலை- கீரனூர் சாலையில் அமைந்துள்ள இந்த ஏரியின் பெரும்பாலான பகுதியில் கொட்டை செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. இந்த செடிகள் வளர்ந்துள்ளதால் ஏரியில் குறைந்த அளவே மழை நீரை தேக்கி வைக்க முடியும். இதனால் விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைவிக்கும் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் பற்றாக்குறை ஏற்படும். ஆகவே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மழை காலம் வருவதற்கு முன்பே பேராம்பூர் பெரிய ஏரியில் அடர்ந்து வளர்ந்துள்ள கொட்டை செடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

முத்துக்குமார், பேராம்பூர்.

ஆபத்தான ரேஷன் கடை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா வடகாடு அருகே உள்ள அணவயல் தடியமனை பகுதியில் அமைந்துள்ள ரேஷன் கடை கட்டிடம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மழைக்காலத்தில் மழை நீர் கசிந்து வருவதால் உள்ளேயுள்ள பொருட்கள் சேதமடைந்தது. இதனால் கட்டிடத்தின் மீது தார்பாயை கொண்டு மூடி வைத்துள்ளனர். எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த ரேஷன் கடை கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஜூலி, அணவயல் தடியமனை.

சாலை வசதி வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி கண்டியன் தெருவில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 45 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி இல்லாமல் பொதுமக்கள் குண்டும், குழியுமான மண் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்லமுடியாமல் தடுக்கி விழும் அவல நிலை உள்ளது. மேலும் மழை பெய்தால் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் அப்பகுதி மக்கள் வீட்டில் முடங்கி கிடக்க வேண்டி உள்ளது. எனவே இந்த சாலையை சிமெண்டு சாலையாக மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கறம்பக்குடி.

மேலும் செய்திகள்