திருச்சி
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்
திருச்சி செல்வநகர் 2-வது வீதியில் சாலை ஓரம் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களில் ஒரு சில இடங்களில் மின் கம்பி தாழ்வாக செல்கிறது. இதனால் இதன் அருகே உள்ள வீடுகளின் மாடிக்கு சென்றால் குழந்தைகளின் கைகளுக்கு மின் கம்பிகள் எட்டும் வகையில் உள்ளது. எனவே விளையாட்டுத்தனமாக குழந்தைகள் மின்கம்பியை பிடித்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், செல்வநகர்.
தேங்கி நிற்கும் மழைநீர்
லால்குடி- திருச்சி மெயின் ரோட்டில் தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் இச்சாலையின் வழியாக பஸ், கார் வேகமாக செல்லும் போது நடந்து செல்பவர்கள் மீது சாக்கடைநீர் வாரி இறைக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தாழ்வாக உள்ள பகுதியை சரிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சமூக ஆர்வலர், லால்குடி.
தொடர் மின் வெட்டு
திருச்சி மாவட்டம், கீழவாளடி பகுதியில் உள்ள மாஸ்கார்டன், மல்லிகைநகர், அகிலண்டஸ்வரிநகர், அம்பாள் நகர் போன்ற பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுவதால் கூலி வேலை செய்து விட்டு வரும் மக்கள் இரவில் தூங்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுரேஷ், கீழவளாடி.