< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
4 Jun 2023 6:37 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடம்

கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சியில் 1962-ம் ஆண்டு அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டது. இப்பள்ளி கட்டிடத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் பயின்று வந்தனர். பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 60 ஆண்டுகள் ஆனதனால் வகுப்பறைக்குள் ஆங்காங்கே கான்கிரீட்டுகள் பெயர்ந்து விழுந்தது. கடந்த சுமார் 2 ஆண்டுகளுக்கு முன் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்கு சொந்தமான 2 சமுதாய கூடத்தை பள்ளிக்கூடமாக மாற்றி 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர். எனவே கரூர் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடம் இருந்த இடத்தில் புதிதாக பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுத்து ஏழை மாணவ- மாணவிகளுக்கு உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ரோஜாபிரியன், தோட்டக்குறிச்சி.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

கரூர் மாவட்டம், கோம்புப்பாளையத்திலிருந்து திருக்காடுதுறை செல்லும் ராஜவாய்க்கால் ஓரத்தில் போடப்பட்டுள்ள மண் சாலை வழியாக மின்கம்பம் நடப்பட்டு அந்த வழியாக மின்கம்பிகள் செல்கிறது. தற்போது வெயில் காரணமாக அந்த வழியாக செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. ராஜவாய்க்கால் ஓரத்தில் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மீது மின்கம்பிகள் மோதும் நிலை உள்ளது. இந்த மின் கம்பிகள் வழியாக 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. மின்கம்பிகள் மோதினால் பெரும் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைத்து விபத்தினை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நாகதேவி, கோம்புப்பாளையம்.

அதிவேகமாக செல்லும் கனரக வாகனங்கள்

கரூர் மாவட்டம், நன்செய் புகழூர், புன்செய்புகழூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் இடம் புகழூர் ஆரம்பப்பள்ளி அருகே உள்ளது. இந்த இடத்தில் இருந்து காவிரி ஆற்றுக்கு செல்லும் சாலையில் கதவணைக்கு செல்லும் கனரக வாகனங்கள் அதிக அளவில் வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இங்கு கோவில்கள் மற்றும் ரேஷன் கடைகள் செயல்படுவதால் இங்கு முதியோர்கள் மற்றும் இளைஞர்கள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமின்றி இங்கு கால்நடைகளை அதிக அளவில் வளர்த்து வருகின்றனர். கோடை விடுமுறை என்பதாலும் இங்கு குழந்தைகள் சாலைகளில் விளையாடி வருகின்றனர். இந்த கனரக வாகனங்கள் அதிக வேகத்தில் வருவதால் விபத்துக்கள் நிகழ வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்ரீராம், நன்செய் புகழூர்.

மேலும் செய்திகள்